தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை ரூ.12,250 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை ரூ.12,250 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
Updated on
2 min read

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.12,250 கோடியே 50 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பழனிசாமி வலியுறுத்திள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதல்வர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு விஷயத்தில் நாடு மிக முக்கியமான நிதி சிக்கலை சந்தித்து வருவது தாங்கள் அறிந்ததே. ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் ஏற்படும் எந்த நிதி இழப்பையும் ஈடுகட்டுவதாக மத்திய அரசு நிபந்தனையற்ற உறுதி அளித்ததால்தான் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஆதரவு அளித்தன.

ஆனால், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வரை வரி வருவாயில் பற்றாக்குறை ஏற்பட்டபோதும், எந்த ஒரு இழப்பீடும் மாநிலங்களுக்கு தரப்படவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை தரவேண்டிய ரூ.11,459 கோடியே 37 லட்சம் உட்பட இதுவரை ரூ.12,250 கோடியே 50 லட்சம் இழப்பீடு தமிழகத்துக்கு வரவேண்டியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கரோனா பெருந்தொற்று காரணமாகவும், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளாலும் மோசமான வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. ரூ.7ஆயிரம் கோடி வரை சுகாதார கட்டமைப்பு, மருத்துவ உபகரணங்கள், நிவாரணம் ஆகியவற்றுக்காக கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. எனவே, இழப்பீட்டு தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று, மாநிலங்கள் ஜிஎஸ்டி பற்றாக்குறையை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து கடன் வாங்குவதாகும். இதை செயல்படுத்துவது நிர்வாக ரீதியாக கடினம் என்பதுடன் மிகுந்த செலவினம் கொண்டதாகும். எனவே, மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க நிதி வளத்தை கண்டறிய வேண்டும். தேவைப்பட்டால், கடன் வாங்கவோ அல்லது மேல் வரியை நீட்டிக்கவோ செய்யலாம்.

இரண்டாது வாய்ப்பில், மொத்தமுள்ள ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடியை கடனாக மாநிலங்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் ஏற்கெனவே மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒரு சதவீதம் கடனும் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, இரண்டாவது வாய்ப்பிலும் மாநிலங்களின் நிலை கவனத்தில் கொள்ளப்படவில்லை.

மத்திய அரசு முன்வைத்துள்ள இரண்டு வாய்ப்புகளால், மாநிலங்களின் ஒட்டுமொத்த ஆதாரங்களும் குறைய வாய்ப்புள்ளது. கரோனாவுக்காக அதிக நிதி செலவழிக்கப்பட்டு வரும் நிலையில், நிதிச்சிக்கலால் மூலதன செலவுகள்,நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும்.

எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு, ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம்நிலுவைத்தொகைகளை முழுமையாக வழங்க முடியும். இந்த நிதியாண்டில் ஜிஎஸ்டிக்கான முழுஇழப்பீடு வழங்குவது, சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் உள்நாட்டுஉற்பத்தி மதிப்பில் 2 சதவீதம் அளவுக்கு கடன் பெறுவது ஆகியவற்றை அனுமதிக்க வேண்டும். இதற்கான நிபந்தனைகளையும் தளர்த்த வேண்டும். வரும் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள் எந்த நிலுவையும் இல்லாமல் வழங்கப்படும் என உறுதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in