மத்திய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.12,000 கோடி சலுகை அல்ல; உரிமை: தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் கருத்து

மத்திய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.12,000 கோடி சலுகை அல்ல; உரிமை: தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் கருத்து
Updated on
1 min read

மத்திய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ.12 ஆயிரம் கோடி, சலுகை அல்ல உரிமை என, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று திறந்து வைத்த பின்னர், அவர் கூறியதாவது:

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி அமலான ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டு சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ‘இந்த இழப்பீடு தொகை தடையின்றி மாநிலங்களை சென்றடைய வேண்டும்’ என்று கூறியபோது, அப்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ‘என் வார்த்தையை தருகிறேன்' எனக் கூறி மாநில அரசுகளை அமைதிப்படுத்தினார்.

அவரது வாக்கை மீறும் வகையில், தற்போது ‘ஆக்ட் ஆப் காட்’ (கடவுளின் செயல்) எனக் கூறி, ‘ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்குங்கள் ’ என மத்திய அரசு தெரிவிப்பது தவறான செயலாகும். மத்திய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையான ரூ.12 ஆயிரம் கோடி சலுகை அல்ல, அது நமது உரிமை.

தமிழக அரசு, இதுவரை கரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.10 ஆயிரம் கோடி வரை செலவு செய்திருக்கிறது. இச்சமயத்தில், நமது உரிமையான ரூ.12 ஆயிரம் கோடியை தருவது மத்திய அரசின் கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in