Published : 01 Sep 2020 07:09 AM
Last Updated : 01 Sep 2020 07:09 AM

போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சென்னை புறநகர் சாலைகளில் போலீஸார் குவிப்பு

தென் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் வாகன நெரிசலை சமாளிக்க சென்னை புறநகர் சாலைகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கத்தில் இன்று (செப். 1) முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, மாவட்டங்களுக்கு இடையே சென்று வரலாம், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத ஊழியர்களுடன்இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

இதனால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் சென்னைதிரும்பி வருகின்றனர். ரயில்கள்மற்றும் பேருந்துகள் இயக்கப்படாததால் பெரும்பாலானோர், கார்கள், வாடகை வாகனங்கள், லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் சென்னை வருகின்றனர்.

சென்னையில் இருந்து சென்றவர்கள் ஒரேநேரத்தில் சென்னை நோக்கி திரும்பி வருவதால் சென்னை புறநகர் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று அதிகாலையிலேயே செங்கல்பட்டு பரனூர் சோதனைச்சாவடியில் வாகனங்கள் 3 கிமீ தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

இன்று முதல் சென்னை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என போலீஸார் கணித்துள்ளனர். இதனால், சென்னையின் புறநகர் சாலைகளில்அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டு போக்குவரத்து சீராகஇருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, காட்டாங் கொளத்தூர், சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் எளிதாக செல்ல போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வாகன நெரிசல் ஏற்பட்டால் செங்கல்பட்டு பரனூர் சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்தாமல் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x