Published : 01 Sep 2020 07:06 AM
Last Updated : 01 Sep 2020 07:06 AM

தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன; நோய் அறிகுறிகள் இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: பக்தர்கள் தரிசனம் செய்ய டோக்கன் முறையைப் பின்பற்ற அறிவுறுத்தல்

தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் இடைவெளியுடன் வரிசையில் நிற்பதற்காக வட்டம் வரையப்படுகிறது. படங்கள்: எம்.முத்துகணேஷ்

சென்னை

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் இன்றுமுதல் பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும் நிலையில், நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். அனை வரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். கோயிலின் கர்ப்பக் கிரகத்துக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வழிபாட்டு தலங்களுக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும்.

பக்தர்களுக்கு இடையே 6 அடிஇடைவெளி இருக்க வேண்டும்.

நுழைவு வாயிலில் கையை சுத்தப்படுத்த கிருமிநாசினியும் முடிந்தால் உடலின் வெப்பத்தை அளக்க வெப்பமானியும் இருக்க வேண்டும்.

சிலைகளை (சொரூபங்கள்), புனித நூல்களை யாரும் தொடக்கூடாது. பிரசாதம் விநியோகம் கூடாது. புனித நீர் தெளிக்கக் கூடாது.

இந்து கோயில்கள்

குறைந்தபட்ச அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாகடோக்கன் முறை அமல்படுத்த வேண்டும். டோக்கன்களில் தரிசனம் தேதி, நேரம் குறிப்பிட்டு வழங்க வேண்டும். ஒவ்வொரு மணி நேர தரிசனத்துக்கும் தனித்தனி வண்ணங்களில் டோக்கன்கள் வழங்க வேண்டும்.

தரிசன நேரத்துக்கு அந்தந்தகோயில்களின் இணையதளத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு வாரத்துக்கு மட்டுமே முன்பதிவு செய்யவேண்டும். தரிசன நாள், நேர விவரத்தை குறுஞ்செய்தி மூலம் பக்தர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

பக்தர்கள் கால்களை நீரால் சுத்தம் செய்து அதன்பின் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

நோய் அறிகுறி இல்லாத பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

கோயில் நுழைவு வாயில் முதல் பிரகாரங்கள், சந்நிதிகள் ஆகிய இடங்களுக்கு பக்தர்கள் சமூக இடைவெளியை பராமரிக்க தரையில் வட்டங்கள் வரைய வேண்டும்.

சுவாமி சிலைகளை தொடக்கூடாது. பஜனை, பக்தி இசைக்குழுவுக்கு அனுமதி கிடையாது.

குங்குமம், மஞ்சள், விபூதி, தீர்த்தம் பூ, இதர பிரசாதங்களை பக்தர்களைத் தொடாமல் அர்ச்சகர்கள் வழங்க வேண்டும்.

பக்தர்கள் தேங்காய், பூ, பழம்கொண்டு வரக் கூடாது

திருக்குளத்துக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மசூதிகள், தர்காக்கள்

தொழுகையின்போது ஒவ்வொருவரும் வீட்டில் இருந்து விரிப்பை கொண்டுவர வேண்டும்.

தொழுகையின்போது ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளி வேண்டும்.

மசூதி வளாகத்தில் உள்ள மதர்ஷா அல்லது மத போதனைவகுப்புக்கு தற்போது அனுமதி இல்லை. தர்காக்களில் ஆடைகள், மலர்கள் விநியோகிக்க அனுமதி இல்லை.

தேவாலயங்கள்

ஆலயத்தில் ஒவ்வொருவரும் 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

ஆலயமணி உள்ளிட்ட எந்தபொருட்களையும் தொடக் கூடாது. வழிபாடு மற்றும் பாடல் புத்தகங்களை பயன்படுத்தக் கூடாது.

பாடல் குழுவினர் பாட அனுமதி இல்லை. நற்கருணையை தொடுவது, புனித நீர் தெளிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

ஆலய வழிபாடு தொடங்குவதற்கு முன்பும், முடிவடைந்த பின்னரும் ஆலய வளாகத்தில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும், கோயில், மசூதி, தேவாலயத்தில் நடைபெறும் திருமணங்களில் 50 பேருக்கு மேல் அனுமதியில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் குருத்வாரா, புத்தவிஹார், ஜைன, பார்சி வழிபாட்டுத் தலங்களிலும் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x