

கோவை அரசு மருத்துவமனை கரோனா பரிசோதனை ஆய்வகத்திலிருந்து முடிவுகளைக் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் மார்ச் 20-ம் தேதி முதல் கரோனா பரிசோதனை ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நுண்ணுயிரியல் துறை தலைவர் மைதிலி தலைமையிலான குழுவினர், நாள்தோறும் 1,600 மாதிரிகள் வரை பரிசோதித்து முடிவுகளை அளித்து வருகின்றனர். ஐசிஎம்ஆர் சான்று பெற்றுள்ளதால், தரப் பரிசோதனைக்காக மற்ற ஆய்வகங்களில் இருந்தும் கோவை அரசு மருத்துவமனை ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்நிலையில், பரிசோதனை செய்துகொண்டவரின் செல்போன் எண்ணுக்கு முடிவைத் தெரிவிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனையின் டீன் டாக்டர் பி.காளிதாஸ் கூறும்போது, “பரிசோதனை செய்துகொண்டு 'நெகட்டிவ்' என முடிவு வருபவர்களின் செல்போன் எண்ணுக்குக் கடந்த 3 நாட்களாக முடிவுகளை அனுப்பி வருகிறோம். அதில் பரிசோதனை செய்துகொண்டவரின் பெயர், முடிவு விவரம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இவ்வாறு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்ப 11 பைசா செலவாகிறது. 1 லட்சம் எஸ்.எம்.எஸ் அனுப்ப ரூ.11 ஆயிரம் செலவாகும். இதுவரை 4,500 எஸ்.எம்.எஸ்-கள் அனுப்பப்பட்டுள்ளன.
அனுப்பிய குறுஞ்செய்திகள் 94 சதவீதம் உரியவர்களைச் சென்று சேர்ந்துள்ளன. செல்போன் எண்ணைத் தவறாக அளித்தவர்கள், தொடர்புகொள்ள முடியாத இடத்தில் உள்ளவர்கள், ஸ்விட்ச் ஆஃப் போன்ற காரணங்களால் சிலருக்கு மட்டும் குறுஞ்செய்தி சென்று சேரவில்லை. தொற்று உறுதியானவர்களுக்கு (பாசிட்டிவ்) தற்போது சுகாதாரத்துறை மூலம் மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.