

புதுச்சேரியில் இன்று புதிதாக 291 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் புதுச்சேரியிலுள்ள நான்கு பிராந்தியங்களில் மாஹேயில் மட்டும் தொற்று பாதிப்பு குறைவாக உள்ளது. இதற்கான காரணமும் தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் 1074 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவை - 261, காரைக்கால் - 22, ஏனாம் - 1, மாஹே - 7 என மொத்தம் 291 பேருக்குத் (27.09 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 6 பேர், காரைக்காலில் ஒருவர் என 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.58 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 14,411 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9,334 பேர் (64.77 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக, புதுவையில் 330 பேர், காரைக்காலில் 28 பேர், ஏனாமில் 8 பேர் என மொத்தம் 366 பேர் வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுவை மாநில பிராந்தியங்களான புதுவை, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் 12,582 பேரும், காரைக்காலில் 893 பேரும், ஏனாமில் 884 பேரும் கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் மாஹே பிராந்தியத்தில் 52 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த 70 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு கண்ணூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். அவரின் இறப்பு புதுவை மாஹே பிராந்திய கணக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது 22 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்னர். சிகிச்சை பெற்று குணமடைந்து, 30 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதற்கு மாஹே பிராந்திய மக்கள் விழிப்புணர்வோடு அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதே காரணம் என தெரிய வந்துள்ளது.
மாஹேவில் தொற்று குறைவு ஏன்?
இதுதொடர்பாக மாஹே பிராந்திய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "மாஹே பிராந்திய மக்கள் முகக்கவசம் அணிவது, கிருமிநாசினியை அடிக்கடி பயன்படுத்துவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் விழிப்புணர்வோடு உள்ளனர். மேலும் ஆயுர்வேத, சித்த சிகிச்சை முறைகளை அதிகளவில் கடைப்பிடித்து வருகின்றனர்.
எதிர்ப்பு சக்தியைத் தூண்டக்கூடிய மருந்துகளையும் உட்கொண்டு வருகின்றனர். இதனால்தான் அங்கு தொற்று பரவவில்லை. மாஹேயில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. வழக்கமாக ஒருவர் வீட்டிற்கு மற்றொருவர் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். ஆனால் கரோனாவால் அவர்கள் கொண்டாட்டங்களைக் குறைத்துக் கொண்டனர்" என்று குறிப்பிட்டனர்.