

சட்டப்பேரவை தேர்தலுக்காக வரும் ஜனவரியில் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் திருமண விழா ஒன்றில் பங்கேற்றபின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் மிக உற்சாகத்துடன் உள்ளனர். எல்லாத் தொண்டர்களின் கருத்தும் வரும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதாக உள்ளது.
இருந்தும் வரும் ஜனவரியில் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி கருத்துகள் கேட்டு அதற்கேற்ப கட்சியின் தலைவர் விஜயகாந்த் முடிவை அறிவிப்பார். வரும் தேர்தலில் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.
இத்தேர்தல் தேமுதிகவிற்கு திருப்புமுனை வெற்றியை தரும். தற்போது அதிமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம். தமிழகத்தில் தேமுதிக இல்லாமல் யாரும் கூட்டணி அமைக்க முடியாது. இப்போது யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. வரும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது.
அதிமுக, திமுக இல்லாத மாற்று அரசியல் தமிழகத்தில் வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். தமிழகத்தில் மு.கருணாநிதி, ஜெயலலிதா போன்ற 2 பெரிய ஆளுமைகள் இல்லை.
அதனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிறைகளும், குறைகளும் உள்ளன.
மத்திய அரசு இன்னும் பல திட்டங்களை கொண்டு வந்து வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார். பேட்டியின்போது ராமநாதபரம் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா உடனிருந்தார்.