

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நாளை திறக்கப்படுகிறது. இதுபோல் மாவட்டத்துக்குள் பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்து கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
கரோனா ஊரடங்கு பல்வேறுகட்ட தளர்வுகளுடன் அமலில் உள்ளது. ஏற்கெனவே ஒருகால பூஜை நடைபெறும் கோயில்கள், கிராமப்புற கோயில்கள் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் (செப்.1) முதல் அனைத்து வழிபாட்டு தலங்களையும் பக்தர்கள் தரிசனத்துக்காக சில கட்டுப்பாடுதளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில் பக்தர்கள் வழிபாட்டுக்கு திறக்கப்படுகிறது.
இதையொட்டி இத் திருக்கோயிலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பக்தர்கள் பாதுகாப்பாக கோயிலில் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
பேருந்துகளை இயக்க நடவடிக்கை:
இதுபோல் அரசுப் பேருந்துகளை நாளை முதல் இயக்கவும் அரசுப் போக்குவரத்து கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் வழியாக பாபநாசத்துக்கும், திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் காவல்கிணறு வரையும், சங்கரன்கோவில் செல்லும் பேருந்துகள் மானூர் வரையும், தூத்துக்குடிக்கு செல்லும் பேருந்துகள் வல்லநாடு வரையும், திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் செய்துங்கநல்லூர் வரையிலும் இயக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்காக பேருந்துகளை தயார்படுத்தும் பணிகளில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஈடுபட்டனர். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் கிருமி நாசனி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி, சுகாதாரத்துறை பணியாளர்களும், தூய்மை பணியாளர்களும் ஈடுபட்டனர்.