

கேரள வனத்துறையினரின் இடை யூறுகளை தவிர்க்க, பளியங் குடியில் இருந்து கண்ணகி கோயி லுக்குச் செல்லும் மலைப்பாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மங்கலதேவி கோயில் எனும் கண்ணகி கோயில், தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது. தமிழகத்துக்குச் சொந்தமான கண்ணகி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளை இன்றைக்கு கேரள அரசு உரிமை கொண்டாடி வருகி றது.
கேரள அரசு அத்துமீறல்
இக்கோயிலுக்குச் செல்லும் தமிழர்களின் உரிமையை பறிப் பதற்காக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த சிலர் கோயிலுக்குள் புகுந்து கண்ணகி சிலையை சேதப்படுத்தி துர்க்கை சிலையை பிரதிஷ்டை செய்தனர். 1982-ம் ஆண்டு மே 5-ம் தேதி சித்ரா பவுர்ணமி விழாவுக்குச் சென்ற தமிழர்களை, கேரள காவல்துறையினர் கைது செய்தனர். மத்திய அரசு தலையிட்டதன்பேரில் தமிழக, கேரள அதிகாரிகள் கலந்துபேசி விழாவை நடத்தி வருகின்றனர்.
கண்ணகி கோயில் தங்கள் எல்லைக்குள் இருப்பதாக, கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. இதுகுறித்து ‘தி இந்து’விடம் பக்தர்கள் சிலர் கூறுகையில், 1959-ம் ஆண்டு தமிழக அரசின் வரைபடங்களில், இப்பகுதி தமிழக எல்லைக்குள் உள்ளது. என தெளிவாகக் குறிப் பிடப்பட்டுள்ளது.
சர்வேயில் உறுதி
1934-ம் ஆண்டு, மதுரை மாவட்ட அரசிதழில் கூடலூர் கிராமத்தினர் இக்கோயிலுக்குச் செல்ல 12 அடி அகல வழித்தடம் அமைத்திருந்தது குறிப்பிட்டிருந்தது. 1975-ம் ஆண்டு தமிழக, கேரள நில அளவைத் துறையினர் நடத்திய கூட்டு சர்வேயில், கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி, தமிழக எல்லையில் கண்ணகி கோயில் அமைந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், கேரள வனத்துறையினர் பெரியார் புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. அதனால், தங்களது அனுமதியின்றி பக்தர்கள் கோயிலுக்குச் செல்லக் கூடாது. என தடுத்து வருகின்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலுக்குச் செல்ல, தமிழக அரசு பளியங்குடியில் இருந்து கண்ணகி கோயிலுக்குச் செல்லும் மலைச்சாலையை சீரமைத்தால் தமிழக எல்லைக்குள்ளேயே வாகனங்களில் சென்றுவர ஏதுவாக இருக்கும் என்றனர்.