சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தயாராகும் கொடைக்கானல்: பூங்கா, படகு சவாரிக்கு அனுமதியில்லை 

கொடைக்கானல் ஏரிச்சாலையில் ஐந்து மாதங்களுக்கு பிறகு சுற்றுலாபயணிகளை எதிர்பார்த்து கடைகளை தயார் செய்யும் சிறுவியாபாரி.
கொடைக்கானல் ஏரிச்சாலையில் ஐந்து மாதங்களுக்கு பிறகு சுற்றுலாபயணிகளை எதிர்பார்த்து கடைகளை தயார் செய்யும் சிறுவியாபாரி.
Updated on
2 min read

ஐந்து மாத இடைவெளிக்குப் பின் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தயாராகி வருகிறது கொடைக்கானல். படகுசவாரி, பிரையண்ட் பூங்கா பகுதிகளுக்குச் செல்ல அனுமதியில்லை. இயற்கையை ரசித்துச் செல்ல மட்டுமே அனுமதியளிக்கப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன்னரே கரோனா தொற்று அச்சம் காரணமாக மார்ச் மாதத்தில் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன.

இதையடுத்து தமிழக அரசு முழு ஊரடங்கை பிறப்பித்தது. ஏப்ரல், மே என இரண்டு மாதங்கள் கோடை சீசன் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும்.

ஆனால் இந்த ஆண்டு முற்றிலும் முடக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலுமாக இல்லை. மேலும் இந்த நிலை தொடர்ந்து ஐந்து மாதங்கள் நீடித்ததால் கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

இந்தநிலையில் தமிழக அரசு தற்போது தளர்வுகளை அறிவித்துள்ளது. விடுதிகள் திறக்க அனுமதி என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஐந்து மாதங்களாக திறக்கப்படாத விடுதிகளை சுற்றுலாபயணிகளுக்காக தயார் செய்யும் பணியை விடுதி உரிமையாளர்கள் தொடங்கியுள்ளனர்.

சுற்றுலாத்தலங்களில் கடைவைத்திருந்த சிறு வியாபாரிகளும் தங்கள் கடைகளை நாளை முதல் திறக்க ஆயத்தமாகிவருகின்றனர். ஐந்து மாதங்களுக்கு பிறகு சுற்றுலாபயணிகளை வரவேற்க கொடைக்கானல் தயாராகிவருகிறது.

இந்நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் இ பாஸ் கேட்டு விண்ணப்பித்து அனுமதி கிடைத்தவுடன் தான் கொடைக்கானல் செல்லவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாபயணிகள் வருகை குறைவாகவே இருக்கும் என்ற கவலையும் சிறுவியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாவுக்கு அனுமதி என்ற அரசின் அறிவிப்பு கடந்த ஐந்து மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு சற்று ஆறுதலான விஷயமாகவே உள்ளது.

இன்று முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாபயணிகள் வழக்கமாக செல்லும் பிரையண்ட்பூங்கா, ரோஜாத்தோட்டம், படகுசவாரி ஆகியவற்றிற்கு செல்லமுடியாது. இவைகளை திறக்க அரசு அனுமதியளிக்கவில்லை.

இதுபோன்று வனத்துறை பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களும் தடை தொடரும் என தெரிகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு அரசு உத்தரவு எதுவும் வராததால் உறுதியான முடிவு எடுக்கமுடியாமல் உள்ளனர்.

கொடைக்கானலில் தற்போது இதமான தட்பவெப்பநிலை நிலவுவதால் (வெப்பநிலை அதிகபட்சம் 18 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 14 டிகிரி செல்சியஸ்) அங்கு செல்லும் சுற்றுலாபயணிகள் இயற்கையை முழுமையாக ரசித்துவிட்டு வரலாம். மேலும் பூம்பாறை கோயில், குறிஞ்சியாண்டவர் கோயில்களுக்கு செல்லஅனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in