

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில், வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என்ற தொடர் புகார் காரணமாக பல மட்டங்களில் வழக்குகள் பசுமை தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம், மீண்டும் உச்ச நீதிமன்றம் எனத் தொடர்ந்த நிலையில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்கள் போராட்டம் தொடர்ந்தது.
100 நாட்கள் தொடர்ந்த போராட்டத்தில் நூறாவது நாள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி மனுகொடுக்கச் சென்றபோது போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பொதுமக்களில் 13 பேர் பலியானார்கள். இதனால் எழுந்த பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது.
தமிழக அரசின் அந்த உத்தரவுக்கு எதிராக ஆலை நிர்வாகத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.
இதனையடுத்து தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக் குழுக்கள் உள்ளிட்டோர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேவேளையில், கடந்த 26-ம் தேதி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது.
அந்த மனுவில், “ஸ்டெர்லைட் ஆலைக்குள் அதன் ஊழியர்கள் சென்று பராமரிப்புப் பணியை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசோ, அரசின் துறையோ நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். ஆகஸ்டு 18-ம் தேதி அன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி ரோகின்டன் நாரிமன், நவீன் சின்ஹா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த மனு தொடர்பாகப் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்தனர்.
அதேவேளையில் இடைக்கால நிவாரணமாக ஸ்டெர்லைட் ஆலைக்குச் சென்று பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.