

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே பழங்குடியினப் பெண்ணைப் புலி கடித்துக் கொன்றது. இதனால் புலியை பிடிக்க வனத்துறை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது மசினகுடி, சி்ங்காரா வனச்சரகம். இன்று மதியம் இந்த வனப்பகுதியில் சுமார் 50 வயதுடைய பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரின் தலை மற்றும் முகத்தில் புலி தாக்கிய காயங்கள் இருந்தன.
சம்பவம் குறித்து அறிந்ததும் புலிகள் காப்பகத் துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பட்டது. புலியால் தாக்கிய, உயிரிழந்த பெண் மசினகுடி அருகே குரும்பர்பாடி பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மாதன் என்பவரின் மனைவி கெளரி (50) எனத் தெரிய வந்தது. அவர் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஆழமான காயங்கள் இருந்ததால், புலி தாக்கி உயிரிழந்துள்ளது உறுதியாகி உள்ளது.
கண்காணிப்பு கேமரா, தனிக்குழு அமைப்பு
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநர் ஸ்ரீகாந்த கூறும்போது, ''முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா சரகத்தில் உள்ள கல்லல்ஹா பகுதியில் புலி தாக்கி கெளரி என்ற பெண் இறந்ததுள்ளார். இந்த இடம் காப்பக எல்லையிலிருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் காப்புக்காட்டினுள் உள்ளது. இறந்த பெண்ணுடன் அவரது கணவர் மாதன், செல்வம், கோபி மற்றும் ஜெயா ஆகியோர் இருந்துள்ளனர்.
இவர்கள் இந்த வனப்பகுதியில் கால்நடைகளை மேய்த்து வந்துள்ளனர். புலி, கெளரியைத் தாக்கும் போது இவர்கள் அதை நேரில் பார்த்துள்ளனர். கெளரியின் பிரேதப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். மேலும், புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
மீண்டும் ஆட்கொல்லிப் புலி பீதி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு தொடர்ந்து மூன்றாண்டுகள் ஆட்கொல்லிப் புலி தாக்கி இரு ஆண்கள் மற்றும் இரு பெண்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களில் மூன்று ஆட்கொல்லிப் புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டன.
ஆட்கொல்லிப் புலிகள் குறித்து அச்சம் மக்களிடையே குறைந்து வந்த நிலையில், தற்போது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியின் அருகில் பழங்குடியினப் பெண்ணைப் புலி கொன்றுள்ளது, அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. புலிகள் காப்பகத்தில் பெண்ணைப் புலி கொன்றுள்ளதால், இந்தப் புலி ஆட்கொல்லிப் புலியா? அல்லது எதிர்பாராதவிதமாகப் பெண்ணை புலி கொன்றதா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.