

பொது முடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் ஒரு பகுதியாக நாளை முதல் மாவட்டங்களுக்குள் பேருந்து சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தனியார் பேருந்துகள் சம்மேளனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சம்மேளனத்தின் சார்பில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு இன்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''நாளை (செப். 1) முதல் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளை அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் இயக்கலாம் எனத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து நமது மாநில சம்மேளனம் அனைத்து மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் காணொலி மூலம் கலந்து ஆலோசித்தது.
பேருந்துகளை மாவட்ட எல்லைகளுக்குள் மட்டும் 60 விழுக்காடுப் பயணிகளை வைத்து இயக்க முடியாது. அப்படி இயக்கினால் மிகவும் நஷ்டம் ஏற்படும். பேருந்துகளை மாவட்டங்களுக்கு இடையிலும் இயக்க அனுமதிக்க வேண்டும். அத்துடன், பேருந்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பும் வகையில் பயணிகளை ஏற்றினால்தான் பேருந்துகளை இயக்குவதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியும்.
எனவே, பேருந்துகளை அதனதன் வழித் தடங்களில் முழுமையாக இயக்க அரசு அனுமதிக்கும் வரை தனியார் பேருந்துகளைத் தமிழ்நாடு முழுவதும் இயக்க வேண்டாம் என நமது சம்மேளனம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது''
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.