Published : 31 Aug 2020 03:43 PM
Last Updated : 31 Aug 2020 03:43 PM

சுகாதாரத்துறைக்கு மேலும் 118 ஆம்புலன்ஸ்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் ‘108’ அவசரகால ஊர்தி சேவைக்காக, மொத்தம் 118 புதிய ஊர்திகளின் சேவையை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு, விபத்துக்களை குறைக்கவும், உயிர் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கவும், 108 அவசரகால ஊர்தி சேவையை வலுப்படுத்துதல், விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், தலைக்காய பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 108 அவசரகால ஊர்தி சேவை திட்டத்தில் தற்போது 1005 அவசரகால ஊர்திகள் இயங்கி வருகின்றன.

108 அவசரகால ஊர்தி சேவைகள் மூலமாக இதுவரை 1 கோடியே 20 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து வருதல், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை வீடுகளில் விடுதல் ஆகிய பணிகள் 108 அவசரகால ஊர்திகள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

முதல்வர் மார்ச் 24 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களுக்கு அவசர காலங்களில் உயிர்காப்பதில் சிறப்பாக சேவையாற்றி வரும் 108 அவசரகால ஊர்தி சேவையை மேலும் வலுப்படுத்துவதற்காக, நடப்பாண்டில் 500 புதிய அவசரகால ஊர்திகள் 125 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், 108 அவசரகால ஊர்தி சேவைக்காக 103 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 20 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 90 புதிய அவசரகால ஊர்திகள்;

இரத்த தான முகாம்களில் சேகரிக்கப்படும் இரத்தத்தை, அரசு இரத்த வங்கிகளுக்கு எடுத்துச் சென்று சேமிக்கும் வகையில், 3 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 அரசு மருத்துவமனைகளில் உள்ள அரசு இரத்த வங்கிகளின் பயன்பாட்டிற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன 10 இரத்ததான ஊர்திகள்;

தனியார் நிறுவனம், கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக 45 அவசரகால ஊர்திகள் வழங்க இசைவளித்து, முதற்கட்டமாக 1 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கியுள்ள 18 அவசரகால ஊர்திகள், என மொத்தம் 118 ஊர்திகளின் சேவையை முதல்வர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வரால் இன்று துவக்கி வைக்கப்பட்ட 108 அவசரகால ஊர்திகளில், ஒரு ஊர்தியை நாட்டிலேயே முதல்முறையாக 108 அவசரகால ஊர்தி பெண் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட வீரலட்சுமி இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் காலியாக உள்ள 138 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் இன்று 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தேசிய தர உறுதித் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சுகாதார சேவைகள், சுகாதார குறியீடு, முறையான பராமரிப்பு மற்றும் அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளின் கருத்துக்கள் ஆகியவற்றை தேசிய தர குழு நிபுணர்கள் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு, மத்திய அரசு பரிசுத் தொகையும், தேசிய தரச் சான்றிதழும் வழங்கி பாராட்டி வருகிறது. இந்த பரிசுத் தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய தர உறுதித் திட்டத்தில் 2019-2020ஆம் ஆண்டிற்கு, காஞ்சிபுரம் மாவட்டம் - காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, செங்கல்பட்டு மாவட்டம் - தாம்பரம் அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் மாவட்டம்-ஆம்பூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, ராணிப்பேட்டை மாவட்டம் - சோளிங்கர் அரசு மருத்துவமனை, தருமபுரி மாவட்டம் -அரூர் அரசு மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்டம்-திருச்செந்தூர் அரசு மருத்துவமனை, விருதுநகர் மாவட்டம் - அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, ராமநாதபுரம் மாவட்டம்-பரமக்குடி அரசு மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் - ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, கோயம்புத்தூர் மாவட்டம் - மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, நாமக்கல் மாவட்டம் - ராசிபுரம் அரசு மருத்துவமனை, கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர் அரசு மருத்துவமனை ஆகிய 13 அரசு மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய தர சான்றிதழ்களுடன் பரிசுத் தொகையாக 2 கோடியே 53 லட்சத்து 42 ஆயிரத்து 632 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்பட்ட தேசிய தரச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகைக்கான காசோலைகளை தேசிய தரச் சான்றிதழ்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளின் தலைமை மருத்துவ அலுவலர்களிடம் முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x