கரோனா ஊரடங்கால் கன்னியாகுமரி மாவட்டத்தில் எளிமையான முறையில் ஓணம் கொண்டாட்டம்; குழந்தைகள் ஊஞ்சலாடி உற்சாகம்

கரோனா ஊரடங்கால் கன்னியாகுமரி மாவட்டத்தில் எளிமையான முறையில் ஓணம் கொண்டாட்டம்; குழந்தைகள் ஊஞ்சலாடி உற்சாகம்
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கால் ஓணம் பண்டிகை எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. வீடுகளிலேயே குழந்தைகள் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர்.

கேரளாவின் வசந்த விழாவாகவும், முதன்மையான பண்டிகையாகவும் ஓணம் கொண்டாடப்படுகிறது. இதைப்போல் உலகமெங்கும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் தாங்கள் வசிக்கும் ஊர்களில் ஓணத்தை உற்சாகமாகக் கொண்டாடுவர். தமிழகத்தில் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மலையாள மொழி பேசுவவோர் இருப்பதால் ஆண்டுதோறும் இங்கும் ஓணம் பண்டிகை களைகட்டும். ஓணத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

கரோனா பாதிப்பால் கேரளாவிலும் இன்று வழக்கமான ஆடம்பரமின்றி எளிமையான முறையிலே மக்கள் ஓணத்தை கொண்டாடினர். இதைப்போலவே கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் மிகவும் எளிமையான முறையில் குழந்தைகள், பெரியவர்களுடன் ஓணம் கொண்டாடப்பட்டது.

மலையாள மக்கள் அதிகமாக உள்ள பத்மநாபபுரம், குழித்துறை, மார்த்தாண்டம், களியக்காவிளை, குலசேகரம், திற்பரப்பு, மேல்புறம், அருமனை, நாகர்கோவில் வடசேரி, சுசீந்திரம் ஆகிய இடங்களில் நேற்று அதிகாலையிலேயே வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு பெண்கள் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதைப்போல் குழித்துறை திற்பிலாங்காடு மகாதேவர் கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் போன்றவற்றில் அத்தப்பூ கோலமிட்டு பக்தர்கள் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

வடசேரி தழியபுரம் பகுதி போன்ற இடங்களில் வீட்டு முன்பு ஓணம் ஊஞ்சல் கட்டி குழந்தைகள் ஊஞ்சலாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதைப்போல் பெண்கள், பெரியவர்களும் ஓணம் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர். மேலும் வழக்கமாக அதிகமானோர் கூடி விருந்து கொடுக்கும் நிகழ்வை மக்கள் தவிர்த்தனர். வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து ஓணத்திற்கான சத்யா விருந்து உண்டனர்.

கரோனாவினால் போதிய வருமானம் இல்லாததால் ஓணத்திற்கான ஆடம்பர செலவுகளை மக்கள் தவிர்த்தனர். இதைப்போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஓணம் பண்டிகைக்காக கேரளாவிற்கு செல்லும் நேந்திரன் வாழைக்காய், மலர்கள், காய்கறிகள், மற்றும் உணவு பொருட்கள் விற்பனை பெயரளவிற்கே நடந்ததால் எப்போதும் இல்லாத அளவு வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in