Last Updated : 31 Aug, 2020 02:49 PM

 

Published : 31 Aug 2020 02:49 PM
Last Updated : 31 Aug 2020 02:49 PM

புதுச்சேரி, காரைக்காலில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் நிறுவனங்கள் மின்கட்டண பாக்கி: ரூ.108 கோடியைத் தொட்ட நிலுவைத்தொகை 

புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்காலில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உள்ள மின்கட்டணப் பாக்கியின் நிலுவைத்தொகை ரூ.108 கோடியைத் தொட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா காலத்தில் மின்சாரக் கணக்கீடு செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக சராசரி அளவு எனக் கணக்கிட்டு தற்போது மின்கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். அக்கட்டணத் தொகையோ பல மடங்கு உள்ளதாகப் பலரும் புகார் தெரிவிக்கின்றனர். மின்கட்டணம் செலுத்தாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருதி பொதுமக்கள் தங்களுக்கு வந்த பல ஆயிரம் ரூபாய் மின்கட்டணங்களைச் செலுத்தி வருகின்றனர். கூடுதலாக மின்கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளோ மவுனம் காக்கின்றன. அத்துடன் கடந்த ஜூன் மாதம் முதல் மின்கட்டணமும் புதுச்சேரியில் உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில் மின்துறையானது பல இடங்களில் அதிக அளவு மின்கட்டண பாக்கி வைத்துள்ளோரிடம் சலுகை காட்டுவதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் விண்ணப்பித்தார். அதில் புதுச்சேரி, காரைக்காலில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் மின்கட்டணம் பாக்கி உள்ளோர் விவரத்தை கோரியிருந்தார்.

இது தொடர்பாக ரகுபதி கூறியதாவது:
"மின்கட்டண பாக்கி தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் கேட்டேன். அதன்படி புதுச்சேரியில் ரூ.88.66 கோடியும், காரைக்காலில் ரூ.19.58 கோடியும் என மொத்தம் ரூ.108.24 கோடி கட்டண பாக்கி உள்ளது. இதில் 8 அரசுப் பொது நிறுவனங்களும் அடங்கும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பாக்கி வைத்துள்ள தொகையே இவ்வளவு என்றால் முழு பாக்கி விவரம் இன்னும் பல கோடிகள் இருக்க வாய்ப்புள்ளது.

தற்போது அரசு, மின்கட்டணத்தை அதிகமாக உயர்த்தியுள்ள சூழலில் ஏழை, நடுத்தர மக்கள் ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்துகின்றனர். கட்டணம் செலுத்தாவிட்டால் மின்துறை நடவடிக்கை எடுக்கிறது. அதே நேரத்தில் அதிக அளவு பாக்கி வைத்துள்ளோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மின்துறை அலட்சியத்துடன் பாரபட்சமாகச் செயல்படுவதைக் காட்டுகிறது.

நிறுவனங்கள் மீதுள்ள கோடிக்கணக்கான மின்பாக்கியை மின்துறை வசூலிக்காததால் இந்த நிதிச்சுமை பொதுமக்கள் மீது திணிக்கப்படும் சூழல் உருவாகும். இத்தொகையை உடனே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர், முதல்வரிடம் இன்று மனு தந்துள்ளேன்."

இவ்வாறு ரகுபதி குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x