இந்தியா முழுவதும் பாஜகவின் ஆதரவின்றி எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது: மதுரையில் ஹெச்.ராஜா பேட்டி

இந்தியா முழுவதும் பாஜகவின் ஆதரவின்றி எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது: மதுரையில் ஹெச்.ராஜா பேட்டி
Updated on
1 min read

ராகுல்காந்தி போன்ற அரை இத்தாலியர்களின் கேள்விக்கெல்லாம் பதில் அளிக்க விருப்பமில்லை. அரசியல் முதிர்ச்சியற்ற அவர் குறித்தெல்லாம் என்னிடம் கேள்வி கேட்காதீர்கள் என்று ஹெச்.ராஜா காட்டமாகத் தெரிவித்தார்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பாஜகவின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா மதுரை வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் நீதிபதி சந்துரு மத்திய நிதியமைச்சரை இழிவாகப் பேசியதை வாபஸ் பெற வேண்டும். அதிமுக கூட்டணியில் குழப்பம் விளைவிப்பதற்காக அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் எல்லை மீறி பேசுவதை நான் கண்டிக்கிறேன்.

அதனை வைத்து சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். தமிழக அரசுக்கு எந்தவிதத்திலாவது கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் இருக்கிறார்கள்.

வெறும் 2 விழுக்காடு ஓட்டு வாங்கிய திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி 50 விழுக்காடு வாக்குகளப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த அடிப்படையில் இனி இந்தியா எங்கும் பாஜகவின் ஆதரவின்றி எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் எனது கருத்து. பிரதமரை தலைவராக கொண்ட பாஜகவை இழிவுபடுத்துவதும் பிரதமரை இழிவுபடுத்துவதும் இரண்டும் ஒன்றுதான்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி வாரியாக பாஜகவின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் தான் நான் வருகை தந்துள்ளேன். மூன்று நாட்களில் நாள்தோறும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் என ஆய்வுப் பணிகள் நடைபெறும்.

மத்திய பாஜக அரசு கரோனா காலத்தில் நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு, நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு வீதம் மாதமொன்றுக்கு மாநில அரசுகளின் வழியாக 100% மத்திய அரசின் மானியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று விவசாயிகளுக்கு ரூபாய் 6000 வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பயன்களைப் பெற்ற பொதுமக்களை பாஜகவின் ஆதரவு வாக்காளர்களாக மாற்றுகின்ற பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது மதுரை மற்றும் திருச்சி நாடாளுமன்றத்திற்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளேன் என்றார்.

நீட் மற்றும் தேர்வு குறித்த ராகுல் காந்தியின் கேள்வி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ராகுல் காந்தி போன்ற அரைவேக்காடுகள், அரை இத்தாலியர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க விரும்பவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in