

வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
ஜூனில் துவங்கும் தென்மேற்கு பருவமழை மூலம் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயரும். அப்போது திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல்போக பாசனத்திற்கு நீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பருவமழை தாமதமாக துவங்கியது.
கடந்த சில வாரங்களாக தொடர் நீர்வரத்து காரணமாக நீர்மட்டம் 59.51 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வைகைஅணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார்.
பெரியாறு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 900கனஅடி வீதம் 45 நாட்களுக்கும், அடுத்த 75நாட்களுக்கு முறைவைத்தும் ஆகமொத்தம் 120நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் ஆயிரத்து 797 ஏக்கர் நிலங்களும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் 16ஆயிரத்து 452 ஏக்கர் நிலங்களும், மதுரை வட்டத்தில் 26ஆயிரத்து 792 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 45ஆயிரத்து 41 ஏக்கர் பாசன வசதி பெறும்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார், கம்பம், சோழவந்தான்,உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்டிகே.ஜக்கையன், கே.மாணிக்கம், பா.நீதிபதி, தேனி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் டி.ஜி.வினய், ம.பல்லவிபல்தேவ், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வி, வைகை வடிநிலகோட்ட செயற்பொறியாளர் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.