

கோவில்பட்டியில் நகராட்சி தினசரி சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை மதிமுகவினர் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டியில் உள்ள இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப் பாதையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் நகராட்சி தினசரி சந்தையில் உள்ள மீன் நுழைவாயில் பாலத்தை விரிவுபடுத்த வேண்டும்.
சந்தையில் கழிவுநீர் கால்வாய் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நவீன சுகாதார வளாகங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
பூங்கா சாலையில் உள்ள அம்மா உணவகத்தை பழைய மாநகராட்சி அலுவலகத்துக்கு மாற்றியமைக்க வேண்டும். 2020-21-ம் ஆண்டுக்கான குப்பை வரியை 10 சதவீதமாக உயர்த்தியதை நகராட்சி திரும்பப்பெற வேண்டும்.
நகர எல்லைக்குள் சாலையோரம் உள்ள மணல் திட்டுக்களை அகற்ற வேண்டும். 36 வார்டுகளிலும் முறையான கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதிமுகவினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ஜி.ரமேஷ், நகரச் செயலாளர் எஸ்.பால்ராஜ், ஒன்றிய செயலாளர் கோ.கார்த்திகேயன், மாவட்ட துணைச் செயலாளர் பவுன் மாரியப்பன், மாநில தீர்மான குழு உறுப்பினர் முத்துச்செல்வன், மாநில கலைத் துறை துணைச் செயலாளர் பொன் ஸ்ரீராம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், நகர இளைஞரணி அமைப்பாளர் லவராஜா, பொதுக்குழு உறுப்பினர் கொம்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை முழங்கினர். தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் ஜே.விஜயாவிடம் வழங்கினர்.