Published : 31 Aug 2020 12:08 PM
Last Updated : 31 Aug 2020 12:08 PM

ரூ.32 லட்சம் கோடி சொத்து மதிப்பு; 42 கோடி மக்களுக்கு ஆயுள் காப்பீடு: எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்க முயல்வதா?- வைகோ எதிர்ப்பு

சென்னை

காப்பீட்டுத் துறையில் தனியார் முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நிறுவனமான எல்ஐசி பங்குகளை விற்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. மத்திய அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும். நூற்றாண்டு கடந்தும் எல்ஐசி நிறுவனம் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

“இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் கோடான கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள எல்ஐசி நிறுவனம் செப்டம்பர் 1 ஆம் நாள், 65 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டில் 1956 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள், எல்ஐசி நிறுவனம் தொடங்கப்பட்டது.

64 ஆண்டுகளில், 13 ஆவது திட்டக் காலத்தில் எல்ஐசி நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு பெற்றுள்ள நிதி ஏழு லட்சம் கோடிக்கு மேல் என்பது மறுக்க முடியாத உண்மை. தற்போது எல்ஐசி நிறுவனம் மட்டும்தான் தனியார் நிறுவனங்களுக்குக் கடும் போட்டியை உருவாக்கி இருக்கிறது.

எல்ஐசி தொடங்கப்பட்ட காலத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூன்று முக்கியமான நோக்கங்களைப் பிரகடனம் செய்தார். ஒன்று, காப்பீட்டுப் பாதுகாப்பு என்பது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இரண்டாவதாக, நுகர்வோருக்குத் தரும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

மூன்றாவதாக, மக்கள் சேமிப்பு மக்கள் நலனுக்கே என்ற வகையில் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்துவது. இந்தக் குறிக்கோள்களை 64 ஆண்டுகளாக எல்ஐசி நிறுவனம் உறுதியோடு நிறைவேற்றி வருவதால்தான் இன்று 42 கோடி மக்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கி, காப்பீட்டுத் துறையில் முன்னணி முதன்மை நிறுவனமாக எல்ஐசி திகழ்கிறது.

எல்ஐசி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்து வரும் ஊழியர்கள் மற்றும் அனைத்துத் தரப்புப் பணியாளர்கள், முகவர்கள் அனைவருக்கும் இதயமார்ந்த வாழ்த்துகளை இந்த நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.

32 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து மதிப்பைப் பெற்றிருக்கும் எல்ஐசி நிறுவனத்தை முழுமையாக தனியாருக்குத் தாரை வார்த்திட, பங்குகள் விற்பனைக்கு மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

காப்பீட்டுத் துறையில் தனியார் முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நிறுவனமான எல்ஐசி பங்குகளை விற்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. மத்திய அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும். நூற்றாண்டு கடந்தும் எல்ஐசி நிறுவனம் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும்”.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x