Published : 31 Aug 2020 10:37 AM
Last Updated : 31 Aug 2020 10:37 AM

தூத்துக்குடி, குமரியில் தளர்வில்லா ஊரடங்கு கேள்விக்குறி

முழு ஊரடங்கை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் காலேஜ் சாலையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் வாகனங்கள் இயங்கின.படம்: மு. லெட்சுமி அருண்.

திருநெல்வேலி/ தூத்துக்குடி/ தென்காசி/ நாகர்கோவில்

கரோனா பரவலை தடுக்கும் வகையில் நேற்று அமல்படுத்தப்பட்ட தளர்வில்லா முழுஊரடங்கால் திருநெல்வேலியில் முக்கிய சாலைகள் வெறிச்சோடின. மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் சாலைகளில் வாகன போக்கு வரத்து வெகுவாகக் குறைந்து காணப்பட்டது.

பாலகங்கள், மருத்துவமனை கள், மருந்துக் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடைகள், வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. நேற்று முகூர்த்த தினம் என்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, உரிய அறிவுரைகள் கூறினர். தேவையில்லாமல் சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் 200 இடங்களில் போலீஸார் வாகன சோதனை நடத்தினர்.

தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களிடம் இருந்து கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகளை மாநகராட்சி பணியாளர்கள் சேகரித்தனர். இதற்காக மாநகரில் 5 இடங்களில் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. மொத்தம் 300 பேரிடம் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆவணி மாத வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் கோவில் பட்டி பகுதியில் திருமணங்கள் குறைந்தளவு உறவினர்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டன. இதனால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் இருந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. அதே நேரம் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் பரவலாக இயங்கின. திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற்றதால் ஊரடங்கை மீறி பலர் வாகனங்களில் சென்றனர். போலீஸாரும் அதிகம் கெடுபிடி செய்யவில்லை.

இதனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது போன்ற சூழல் நிலவியது .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x