

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்தில் உள்ளது நாட்டார் மங்கலம் கிராமம். இந்த கிராமத்தை சுற்றி கூத்தனூர், ஈச்சங்காடு, மருதடி என பல்வேறு கிராமங்கள் உள்ளன. மலைகள் சூழ்ந்த பகுதியான நாட்டார்மங்கலம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் செல்போன் கோபுரங்கள் இல்லை. இதனால், இணைய தொடர்பு சரிவர கிடைக்காததால், இப்பகுதி மக்கள் செல்போன் மற்றும் இணையதளத்தை பயன்படுத்த முடியாமல் அல்லாடுகின்றனர்.
கரோனா ஊரடங்கால் தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் படுகின்றன. தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தொலை தொடர்பு நிறுவ னங்களின் இணைய வழி தொடர்பு அவசியம். ஆனால், நாட்டார் மங்கலம் கிராமத்தில் இணைய தொடர்பு சரிவர கிடைப்ப தில்லை, இங்குள்ள மாணவர்கள், தனியார் ஊழியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இங்குள்ள அரசு அலுவலகங் கள், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலம், நூலகம், பள்ளிக்கூடம், மகளிர் திட்டம் மூலம் இயங்கும் இ-சேவை மையம், அஞ்சல் அலுவலகம் ஆகியவற்றிலும் இணைய தொடர்பு கிடைக்காததால், அங்கு வழங்கப்படும் சேவைகளை இப்பகுதி பொதுமக்கள் பெற முடியாத நிலையும் உள்ளது.
இதுகுறித்து நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் க.விஜய் அரவிந்த் கூறியது: நாட்டார்மங்கலம் கிராமத்தில் இணைய வழி தொலைதொடர்பு கிடைக்காததால், ஆன்லைன் கல்வி பயிலும் இப்பகுதி மாணவ, மாணவிகள் 3 கி.மீ தொலைவில் உள்ள செட்டிக்குளத்துக்கு செல்லும் நிலை உள்ளது. சிலர் செல்போன் சிக்னல் கிடைக்கும் உயரமான கட்டிடங்களில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கின்றனர்.
எனவே, நாட்டார்மங்கலத்தில் செல்போன் கோபுரம் அமைத்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக் கும். இதுகுறித்து கடந்த 2 ஆண்டு களுக்கும் மேலாக முதல்வரின் தனிப் பிரிவு வரை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊரடங்கு காலத்தை முன்னிட்டு இப்போது இணையம் வழியாக பல்வேறு செயல்பாடுகள் நடைபெறுவதால், அரசு அதிகாரிகள் இனியும் காலம்தாழ்த்தாமல் எங்கள் ஊரில் செல்போன் கோபுரம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.