

கோவை மாநகராட்சி ஆணையராக 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பணியாற்றி வந்த ஷ்ரவன் குமார் ஜடாவத், சென்னையில் வேளாண்மைத் துறை துணைச் செயலராக நேற்று முன்தினம் பணிமாறுதல் செய்யப்பட்டார். அவருக்குப் பதில், சென்னை பெருநகர மாநகராட்சியில் துணை ஆணையராகப் பணியாற்றிய குமாரவேல்பாண்டியன், மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றுபவர்கள் பணிமாறுதல் செய்யப்படும் சூழலில், 19 மாதங்கள் மட்டுமே பணியாற்றிய ஷ்ரவன்குமார் ஜடாவத் மாற்றப்பட்டுள்ளார். அண்மையில், கோவை மாநகராட்சிப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பத்தில், மூன்றாவது மொழியாக இந்தி இடம் பெற்றிருந்தது குறித்த சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆணையர் அளித்திருந்த விளக்கத்தில், அது போலி விண்ணப்பம் என்று தெரிவித்திருந்தார். அதேபோல, கரோனா தொற்றைத் தடுகக அவர் மேற்கண்ட யுக்திகளும் முழு பலன் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அனைத்து தொழில், வர்த்தக நிறுவனத்தினர், தங்களது ஊழியர்களுக்கு கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்ற அறிவிப்புக்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த சூழலில், மாநகராட்சி ஆணையர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.