Published : 31 Aug 2020 09:50 AM
Last Updated : 31 Aug 2020 09:50 AM

கரோனா தாக்கத்தால் களையிழந்த பூக்கள் விற்பனை: கைகொடுக்காத ஓணம் பண்டிகை - வியாபாரிகள், விவசாயிகள் ஏமாற்றம்

ஓணம் பண்டிகையையொட்டி கேரள மாநிலத்துக்கு வழக்கமாக அனுப்பப்படும் பூக்களில் 10 சதவீதம்கூட அனுப்பப்படாததால், பூ வியாபாரிகள் மட்டுமின்றி, விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

கோவை புறநகர், உடுமலை, அவிநாசி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், சத்தியமங்கலம், நிலக்கோட்டை, மதுரை, கோபிசெட்டிப்பாளையம், புளியம்பட்டி, பெங்களூரு, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து கோவை பூ மார்க்கெட்டுக்கு தினமும் பூக்கள் கொண்டு வரப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறன. குறிப்பாக, கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் பூக்கள் கொண்டுசெல்லப்படும்.

ஓணம் பண்டிகைக்காக கோவையிலிருந்து 10 நாட்களுக்கு நாள்தோறும் சுமார் 20 டன் பூக்கள் கொண்டுசெல்லப்படுவது வழக்கம். ஆனால், கரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழக-கேரள மாநிலங்களுக்கிடையே போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், குறைந்த அளவே பூக்கள் கொண்டுசெல்லப்படுகின்றன.

இதுகுறித்து கோவை மாவட்ட பூ வியாபாரிகள் சங்க நிர்வாகி கே.கே. ஐயப்பன் கூறும்போது, "கோவை பூ மார்க்கெட்டுக்கு தினமும் சுமார் 500 டன் வரை பூக்கள் கொண்டுவரப்படும். விசேஷ நாட்களில் 1,000 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். ஓணம் பண்டிகையையொட்டி 10 நாட்களுக்கு கேரளாவுக்கு தினமும் சுமார் 20 டன் பூக்கள் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு கரோனா தாக்கத்தால் 10 சதவீதம் பூக்கள்கூட கொண்டு செல்லப்படவில்லை. இதனால், 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும், பூ கட்டுதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஆயிரக்கணக்கானோரும், பூக்களை உற்பத்தி செய்த விவசாயிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர்" என்றார்.

ஆலாந்துறையைச் சேர்ந்த பூ விவசாயி ஆறுமுகம் கூறும்போது, "ஓணம் திருவிழாவுக்கு அத்தப்பூ கோலமிடுவதற்காக வாடாமல்லி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் அதிகம் விற்பனையாகும். ஆலாந்துறை, தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. அறுவடைக்கு பூக்கள் தயாரான நிலையில், கரோனாவால் கேரளாவுக்கு பூக்களை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம்வரை செலவிட்டும், உரிய விலை கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

கோவை பூ மார்க்கெட்டில் நேற்று செண்டுமல்லி கிலோ ரூ.50-60, செவ்வந்தி ரூ.60-100, வாடாமல்லி ரூ.40-60, பட்டுப்பூ ரூ.100-150, துளசி ரூ.60, மல்லி ரூ.600, முல்லை ரூ.400-600, ஜாதிமல்லி ரூ.400-க்கு விற்கப்பட்டது. அதேபோல, ரோஜாப்பூ ஒரு கட்டு ரூ.200, மருகு ஒரு கட்டு 30, வெள்ளை செவ்வந்தி ரூ.140-200-க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x