Published : 31 Aug 2020 08:09 AM
Last Updated : 31 Aug 2020 08:09 AM

சோரஞ்சேரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுப்பு: கோயிலுக்கு பூட்டுப்போட்ட அதிகாரிகள்

ஊரடங்கு காரணமாக சோரஞ்சேரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தை நடத்த, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து, கோயிலுக்கு பூட்டுப் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆவடி அருகே சோரஞ்சேரி கிராமத்தில் 250 ஆண்டுகள் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்துசமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் திட்டமிட்டனர். அதன்படி, ரூ.6 லட்சம் செலவில் கடந்த 4 மாதங்களாக நடந்து வந்த திருப்பணிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, நேற்று கும்பாபிஷேகம் நடத்த மக்கள் முடிவு செய்திருந்தனர்.

இதற்கிடையே, சோரஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர், மாவட்டத்தில் கரோனா பரவும் அச்சம் இருப்பதால், இக்கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்த வேண்டும் என இந்துசமய அறநிலையத் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில், சோரஞ்சேரி கிராம மக்களில் மற்றொரு தரப்பினர் கடந்த 27-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நுழைவுவாயிலில் திரண்டு, கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் விளைவாக, நேற்று முன்தினம் சோரஞ்சேரியில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், இந்துசமய அறநிலையத் துறையின் காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரேணுகாதேவி, பூந்தமல்லி வட்டாட்சியர் செல்வம், சென்னை பெருநகர காவல் துறையின் அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

அப்போது ஊரடங்கு அமலில்இருக்கும் நிலையில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டாம். ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் கும்பாபிஷேகம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோயிலுக்கு பூட்டுப் போட்டனர். பின்னர் கோயில் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, இந்துசமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ``ஊரடங்கு அமலில் உள்ளதால் எந்த கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை.

கும்பாபிஷேகம் நடத்தும் போது அதிக அளவு கூட்டம் சேர வாய்ப்புள்ளதால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவேதான் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை'’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x