Published : 31 Aug 2020 08:07 AM
Last Updated : 31 Aug 2020 08:07 AM

ரூ.4 கோடியில் புதுப்பிக்கப்படும் கோயம்பேடு சந்தை: திடக்கழிவு மேலாண்மை விதிகளை கடைபிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

சென்னை

கோயம்பேடு சந்தை ரூ.4 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு இனியாவது திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் மொத்தம் 3,449 கடைகள் உள்ளன.இந்த கடைகள் மூலம் தினமும் சுமார் 150 டன் குப்பைகள் உருவாகின்றன. இதில் 99 சதவீதம் எளிதில் மக்கக்கூடிய தாவரக் கழிவுகளாகவும், 1 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளாகவும் உள்ளன.

இந்த சந்தை வளாகத்தை தூய்மை செய்யும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டது. அதே நிறுவனம் சார்பில் தினமும் 30 டன் கழிவிலிருந்து 2,500 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் நிலையமும் திறக்கப்பட்டது.

ஆனால் இந்த நிலையம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பெரும்பாலான நேரங்களில் இயங்குவதில்லை. மேலும் தொடர்புடைய தனியார் நிறுவனம் சந்தைப் பகுதியில் இருந்து குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. இதனால் கோயம்பேடு சந்தை குப்பை குவியலுடனும் சுகாதாரக் கேட்டுடனும் காட்சியளித்தது.

ஒப்பந்த விதிகளின்படி, கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை இயக்காததற்காக சந்தை நிர்வாகம் பல கோடி ரூபாய்அபராதம் விதித்தாலும், தொடர்புடைய நிறுவனம் கட்டிவிடுகிறது. இந்த நடவடிக்கையால் கழிவு மேலாண்மை மேம்படவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடைக்காரர்களும் கழிவுகளைமுறையாக அப்புறப்படுத்துவதில்லை. கடை எதிரிலேயே, செல்லும் வழியில் கொட்டி அந்த வளாகத்தையே அசுத்தமாக்கி உள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2016 இதுவரை முறையாக அமலுக்கு வரவில்லை. கழிவுகளை மக்கச் செய்து ஒரு கிலோ இயற்கை உரம்கூட அங்கு உற்பத்தி செய்யப்படவில்லை. இதனால் தினமும் சுமார் 150 டன் தாவரக் கழிவுகள் பெருங்குடியில் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ரூ.4 கோடியில் கோயம்பேடு சந்தை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடைகளுக்கு மேல் வியாபாரிகள் பல ஆண்டுகளாக போட்டு வைத்திருந்த சுமார் 50 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் கோயம்பேடு சந்தை புதுப்பொலிவு பெற்று வருகிறது. இது நல்ல தருணம் என்பதால், திடக்கழிவு மேலாண்மை விதிகளை இப்போதாவது முறையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோயம்பேடு சந்தையில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x