

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி கரோனா சிறப்பு வார்டில் ஆக்சிஜன் சப்ளை பாதிப்பால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்டு 2 மருத்துவர்கள் உட்பட 7 பேருக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 70 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்கள் மற்றும் 1 பெண் என மொத்தம் 3 பேர் ஆக.22-ம் தேதி உயிரிழந்தனர். இந்த வார்டில் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பே அவர்களது உயிரிழப்புக்கு காரணம் என புகார் எழுந்தது. மேலும், நோயாளிகளின் ‘கேஸ் ஷீட்’கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதும், பணி நேரத்தில் பணியாளர்கள் சிலர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மயக்கவியல் துறை உதவிப் பேராசிரியர் கே.ரவிநாதன், மருத்துவத் துறைத் தலைவர் (பொ) சி.பாபு ஆனந்த் மற்றும் செவிலியர்கள் 5 பேர் என 7 பேரிடம் விளக்கம் கேட்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதியிடம் கேட்டபோது, ‘‘மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளிலும் அடிக்கடி ஆய்வு செய்யும்போது மருத்துவர்கள், பணியாளர்கள் செய்யும் சிறுசிறு தவறுகள் கண்டுபிடிக்கப்படும். பின்னர், அவற்றைசரி செய்வதற்காக அவ்வப்போது இதுபோன்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்படும்.
அந்த வகையில் தற்போது நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதும் இயல்பான நடவடிக்கையே. தொழில்நுட்ப கோளாறால் இவர்கள் இறக்கவில்லை’’ என்றார்.