Published : 31 Aug 2020 07:32 AM
Last Updated : 31 Aug 2020 07:32 AM

பல்லாவரம் மேம்பாலம் விரைவில் திறப்பு; ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல் குறையும்: மறைமலை அடிகள் பெயர் வைக்க கோரிக்கை

சென்னை

பல்லாவரம் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், விரைவில் மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளது. இதனால், ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல் குறையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையின் பிரதான சாலையாக இருக்கும் ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முக்கியமான இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பல்லாவரத்தில் ஜிஎஸ்டிசாலை, சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து ரூ.82 கோடி செலவில்1,038 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டப்படும் என்று கடந்த2012-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் மேம்பாலப் பணிகள் தொடங்குவதற்கே3 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அதன்பிறகு, கடந்த 2016-ம்ஆண்டில் மேம்பால கட்டுமானப் பணிகள் தொடங்கி, படிப்படியாக நடைபெற்று வந்தன. இதற்கிடையே, ஊரடங்கால் மேம்பாலப் பணிகள் முடங்கின. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் மீண்டும் தொடங்கின. தற்போது மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது

இதுதொடர்பாக தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஜிஎஸ்டி சாலையில் பல்லாவரம் மேம்பாலப் பணிகள் 2017-ம் ஆண்டுக்கு பிறகுதான் வேகமாக நடைபெற்றன. தற்போது மேம்பாலப் பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே மக்கள் பயன்பாட்டுக்கு மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்’’ என்றனர்.

இதற்கிடையே, பல்லாவரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு மறைமலை அடிகளின் பெயரை வைக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

அண்மையில் மறைமலை அடிகளின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலைக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது மறைமலை அடிகள்இல்லம் உள்ள தெருவுக்கும் பல்லாவரத்தில் கட்டப்படும் பாலத்துக்கும் அடிகளின் பெயரை வைக்கவேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு, முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனஅமைச்சர் தெரிவித்தார். இதேபோல், தமிழ் அறிஞர்கள் பலரும்,பாலத்துக்கு மறைமலை அடிகளின் பெயரை வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அடிகளின் பேரன் மறை.தி.தாயுமானவன் கூறும்போது, ‘‘பல்லாவரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கும் அவர் வசித்த வீடு உள்ள தெருவுக்கும் மறைமலை அடிகள் பெயர் வைக்க அமைச்சர்மூலம் வேண்டுகோள் வைத்துள்ளோம். மறைமலை அடிகள் இல்லத்தை அரசு ஏற்று நினைவு இல்லமாக்க வேண்டும் எனவும் கோரியுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x