Published : 21 Sep 2015 09:45 AM
Last Updated : 21 Sep 2015 09:45 AM

2,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு: சென்னை கடற்கரையில் மக்கள் வெள்ளம்; பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீஸார்

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென் னையில் வைக்கப்பட்டிருந்த 2,500 விநாயகர் சிலைகள் நேற்று கடலில் கரைக்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 17-ம் தேதி கொண்டாடப் பட்டது. இதையொட்டி, சென்னையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டன. இந்து அமைப்புகள், பொது மக்கள், தனியார் சங்கத்தினர் என ஏராளமானவர்கள் சிலைகள் வைத் திருந்தனர்.

இந்து முன்னணி சார்பில் அதிகபட்சமாக ஆயிரத்துக்கும் அதிகமாகவும் இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் சிலைகள் வைக்கப்பட்டன. கரும்பு விநாயகர், தங்க விநாயகர் என 3 முதல் 15 அடி உயரம் வரை பல்வேறு சிலைகள் வைக்கப்பட்டன.

இந்த விநாயகர் சிலைகளை 18,19,20 ஆகிய தினங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பதற்கு போலீஸார் அனுமதி அளித்திருந்தனர். அதன்படி, 18, 19 தேதிகளில் சுமார் 200 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

இந்நிலையில், இறுதி நாளான நேற்று நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2,500 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. நேற்று காலை 10 மணி முதலே சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் தொடங்கின. வட சென்னையில் வைக் கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் முத்துசாமி பாலம் அருகே ஒருங் கிணைக்கப்பட்டன. அங்கிருந்து ஊர்வலமாக பட்டினப்பாக்கம் சீனிவா சபுரம் கடற்கரைக்கு கொண்டு செல்லப் பட்டு, கடலில் கரைக்கப்பட்டன.

இதேபோல, வள்ளுவர் கோட்டம், தி.நகர், திருவல்லிக்கேணி, திருவட்டீஸ் வரன்பேட்டை உட்பட மத்திய சென்னையில் வைக்கப்பட்ட சிலைகளும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. இந்து முன்னணி சார்பில் திருவல்லிக்கேணியில் நேற்று மாலை நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு கமாண்டோ படையினர் மற்றும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.

சேலையூர், கேம்ப் ரோடு, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீலாங்கரை பல்கலைக்கழக நகர் கடற்கரையில் கரைக்கப்பட்டன. சிலை கரைக்கப்பட்ட இடங்களில், ராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பெரிய சிலைகளை கிரேன் மூலம் கடலில் கரைத்தனர். நேற்று ஒரே நாளில் சுமார் 2,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

மேள தாளங்கள் முழங்கியபடி ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிலை கரைக்கப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். 5 இடங்களில் தடுப்புகள் அமைக்கப் பட்டிருந்தன. கடற்கரை பகுதியில் தற்காலிக கோபுரங்கள் அமைத்து கண்காணிப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக் களும் அமைக்கப்பட்டிருந்தன. 5 கூடுதல் கமிஷனர்கள், 6 இணை கமிஷனர்கள், 22 துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள், திருவல்லிக்கேணி வழியாக பட்டினப்பாக்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஊர்வலத்தை போலீஸார் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக கூறி, திருவல்லிக்கேணி பகுதியில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகள் இருந்த வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர். அதன்பிறகு ஊர்வலம் தொடர்ந்து நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x