தூத்துக்குடி மாவட்டத்தில் 2 மாதங்களில் 20 பேர் குண்டர் சட்டத்தில் கைது; எஸ்.பி. தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 20 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்டு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஆக.30) தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
தளர்வில்லா முழு ஊரடங்கை முன்னிட்டு காவல் துறையினரின் கண்காணிப்பு பணிகளை தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய பகுதி மற்றும் குருஸ் பர்னாந்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவசியமின்றி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களை எச்சரித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்குக் கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கி அறிவுரைகள் கூறி அனுப்பினார். மேலும், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு இலவச அரிசி பைகளை அவர் வழங்கினார்.
தொடர்ந்து எஸ்.பி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாக 8,054 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,540 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான வாகனங்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல், விற்பனையை தடுப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இதுவரை 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 39 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், குட்கா விற்பனை தொடர்பாக 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 56 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 3,063 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 24 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 20 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 62 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் சாதி, மதக் கலவரத்தை தூண்டும் வகையிலோ, பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள்" என்றார்.
