

வேளாண் காப்பீடு நிறுவனத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்தும், விடுபட்ட அனைத்து கிராமங்களுக்கும் இழப்பீடு வழங்கிட வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரியும் செப்டம்பர் 8 ஆம் தேதியன்று காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெறும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இன்று (ஆக.30) அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 2019-20 ஆண்டில் சம்பா பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்குத் தற்போது வேளாண் காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்கி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 763 வருவாய் கிராமங்களில் 527 கிராமங்களுக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 514 வருவாய் கிராமங்களில் 147 கிராமங்களுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 573 வருவாய் கிராமங்களில் 360 கிராமங்களுக்கும் மட்டுமே இழப்பீடு நிர்ணயம் செய்து உள்ளனர்.
மீதம் உள்ள 916 கிராமங்களுக்கு இழப்பீடு 0 சதவிகிதம் என கணக்கிட்டு மோசடி செய்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு அனைத்து கிராமங்களிலும் ஆணை கொம்பன் நோய் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டு ஒரே அளவிலான அறுவடை மகசூல் பெற்றுள்ளனர்.
உண்மை நிலைமை இவ்வாறு இருக்க காப்பீட்டு நிறுவனம் தன் விருப்பத்திற்கு இழப்பீடு நிர்ணயம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதனை கண்டித்தும், விடுபடாமல் அனைத்து கிராமங்களுக்கும் உடனடியாக இழப்பீடு உடன் வழங்க கோரியும் வரும் செப்டம்பர் 8-ம் தேதி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் லட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவர். இந்த விவகாரத்தில் சிபிஐ தலையிட்டு உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டும்.
மேலும், திருவாரூரில் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் ஒப்புக் கொண்ட அடிப்படையிலும், உயர் நீதிமன்றம் புதிய நடைமுறைக்குத் தடை விதித்துள்ளதை பின்பற்றியும் பழைய நடைமுறையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடன் வழங்கிட உரிய அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்துகிறோம்" என்றார்.
அவருடன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கதின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பாலமுருகன், செய்தித் தொடர்பாளர் மணிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.