Last Updated : 30 Aug, 2020 03:52 PM

 

Published : 30 Aug 2020 03:52 PM
Last Updated : 30 Aug 2020 03:52 PM

குறைந்த ஊதியம், அதிக இரவு பணி, தொற்று பாதித்தால் சம்பளம் பிடிப்பு: புதுச்சேரி சுகாதார இயக்க ஊழியர்கள் தவிப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

குறைந்த ஊதியம், அதிக இரவு பணி, தொற்று பாதித்தால் சம்பளம் பிடிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு இடையில் புதுச்சேரி சுகாதார இயக்க ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சுகாதாரத்துறை நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக குறைந்த ஊதியத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றியும் பணி நிரந்தர உத்தரவு கிடப்பில்தான் போடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் சுகாதாரத் துறையில் நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக சுகாதார இயக்க ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிரந்தர ஊழியர்கள் செய்யும் அனைத்துப் பணிகளையும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியர்களாக இவர்கள் குறைந்த ஊதியத்தில் செய்து வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம் இதுநாள்வரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இதுபற்றி புதுச்சேரி சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் பொதுச்செயலாளர் முனுசாமி கூறுகையில், "சுகாதாரத்துறையில் காலியாகும் நிரந்தர பணியிடங்களில் 33% பணியிடங்கள் புதுச்சேரி சுகாதார இயக்க ஊழியர்களுக்கு வழங்க இரண்டு முறை அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் இன்றுவரை அரசாணை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், தொடர்ச்சியாக பல கட்ட போராட்டங்களை நடத்தினோம். கடந்த மார்ச் மாதம் பணி நிரந்தரம் கோரி காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். 12 நாட்களாக போராட்டம் நீடித்தது. புதுச்சேரி சுகாதார இயக்க ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யும் வரை, அவர்களின் மாத சம்பளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரூபாய் 10 ஆயிரம் உயர்த்தி வழங்குவதாக அரசுத் தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.

அந்த வாக்குறுதியும் இதுநாள்வரை நிறைவேற்றப்படவில்லை. புதுச்சேரி சுகாதார இயக்க ஊழியர்கள் தற்போது கரோனா பெருந்தொற்று காலத்தில் நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக சொற்ப சம்பளத்தில் இரவுப்பணி உட்பட அனைத்து விதமான பணிகளையும் செய்து வருகின்றனர்.

பல சுகாதார இயக்க ஊழியர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் சிகிச்சை விடுப்புக்கும், நிர்வாகம் தளர்வு அளிக்காமல் சம்பளப் பிடித்தம் செய்யப்படுகிறது.

ஊரடங்கு காலத்தில் அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், வாக்குறுதியை அரசுக்கு நினைவூட்டும் விதமாக காத்திருப்புப் போராட்டம் நாளை (ஆக. 31) நடத்த உள்ளனர். இதுதொடர்பாக முதல்வரிடம் மனுவாகவும் தந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

புதுச்சேரி சுகாதார இயக்க ஊழியர்கள் சங்க தலைவர் பிரகதீஸ்வரன் இதுதொடர்பாக கூறுகையில், "மார்ச் மாதத்தில் போராட்டம் நடத்தினோம். அப்போது பணி நிரந்தரம் தொடர்பான கோப்பை ஆளுநருக்கு உடனடியாக அனுப்புவதாக அரசு தரப்பில் தெரிவித்தார்கள். அத்துடன் கரோனா தடுப்புப் பணிக்காக உடனடியாக வேலைக்கு வந்தோம். ஆனால், ஒரு வாக்குறுதியைக் கூட அரசு நிறைவேற்றவில்லை. அது மன வருத்தமாக உள்ளது.

குறைவான சம்பளம் வாங்கும் எங்களுக்கு அதிகமான இரவு பணி திணிக்கப்படுகிறது. அத்துடன் இரவு பணிக்கு எவ்வித படித்தொகையும் தருவதில்லை. அளித்த வாக்குறுதியை அரசுக்கு நினைவூட்டவே காத்திருப்புப் போராட்டத்தை நாளை நடத்துகிறோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x