Last Updated : 30 Aug, 2020 03:42 PM

 

Published : 30 Aug 2020 03:42 PM
Last Updated : 30 Aug 2020 03:42 PM

சொந்த கிராமத்தில் வசந்தகுமாரின் உடல் அடக்கம்; 'அப்பச்சி தம்பி'... வீட்டிலிருந்து கல்லறை வரை ஒலித்த கண்ணீர் கோஷம்!

இறுதி ஊர்வலத்தில் திரண்ட பொதுமக்கள்

நாகர்கோவில்

மறைந்த வசந்தகுமார் எம்.பி.யின் சொந்த கிராமமான அகஸ்தீஸ்வரத்தில் அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள், உள்ளூர் பிரமுகர்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வசந்தகுமார் எம்.பி. (70) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 28-ம் தேதி காலமானார். சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (ஆக.29) அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸார், மற்றும் பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திற்கு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது வீட்டின் முன்பு வசந்தகுமாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு வீட்டின் முன்பு காத்து நின்ற மக்கள், நள்ளிரவில் இருந்தே விடிய விடிய வசந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், அகஸ்தீஸ்வரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள், குமரி மாவட்டத்தின் பிற பகுதியை சேர்ந்த மக்கள் வரிசையில் காத்து நின்று விடிய விடிய அஞ்சலி செலுத்தினர். கரோனா ஊரடங்கு என்பதால் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அஞ்சலி செலுத்த வந்த மக்களை காவல்துறையினர் ஒழுங்குபடுத்தினர்.

வசந்தகுமாரின் உடல் அருகே அவரது மனைவி தமிழ்செல்வி, மகள் தங்கமலர், மகன்கள் விஜய் வசந்த், வினோத்குமார் ஆகியோர் சோகத்துடன் அழுதவாறு இருந்தனர்.

வசந்தகுமாரின் உடலுக்கு அருகே சோகத்துடன் அவரது குடும்பத்தினர்

வசந்தகுமாரின் உடலுக்குக் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால், எம்.பி.க்கள் ஜோதிமணி, கொடிக்குன்னில் சுரேஷ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, எம்எல்ஏக்கள் ஆஸ்டின், சுரேஷ்ராஜன், பிரின்ஸ், ராஜேஷ்குமார், மனோதங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மயூரா ஜெயக்குமார் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், "வசந்தகுமார் எம்.பி., காங்கிரஸில் சாதாரண தொண்டராக வந்து மாநில பொறுப்புகளை வகித்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராக உயர்ந்துள்ளார். இதைப்போல் தொழிலிலும் சிறிய அளவில் தொடங்கி உழைப்பால் பெரும் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், மற்றும் நண்பர்கள் மனஅமைதி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றார்.

பொதுமக்கள், பிரமுகர்கள் அஞ்சலிக்குப் பின்னர் காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்ட வசந்தகுமாரின் உடல் சந்தனபெட்டியில் வைத்து 10 மணியளவில் வீட்டில் இருந்து அவரது பெற்றோர் அடக்கம் செய்யப்பட்டுள்ள சுக்குப்பாறை தேரிவிளை தோட்டத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வசந்தகுமாரின் உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் பின்னால் ஏராளமான பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர்.

அங்கு பெற்றோரின் கல்லறை அருகே பகல் 11.30 மணிக்கு இந்து முறைப்படி வசந்தகுமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வசந்தகுமாரின் மகன்கள் விஜய்வசந்த், வினோத்குமார் ஆகியோர் இறுதி சடங்குகளை செய்தனர்.

இறுதிச்சடங்கின் போது

அப்போது அவர்கள் துக்கம் தாளாமல் கண்ணீர்விட்டு அழுதனர். கரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் அகஸ்தீஸ்வரம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் என ஏராளானோர் வந்து வசந்தகுமாரின் உடல் அடக்கம் முடியும் வரை இருந்து, பின்னர் சோகத்துடன் திரும்பி சென்றனர். அப்போது வழிநெடுகிலும் சிரித்த முகத்துடன் வசந்தகுமாரின் படங்களுடன் காணப்பட்ட சுவரொட்டிகளை பார்த்தவாறு அவர்கள் கண்கலங்கியதை காண முடிந்தது.

இறுதி ஊர்வலத்தில் திரண்ட பொதுமக்கள்

அப்பச்சி தம்பி... வீட்டிலிருந்து கல்லறை வரை ஒலித்த கண்ணீர் கோஷம்!

வசந்தகுமாரின் உடல் அகஸ்தீஸ்வரத்தில் அவரது வீட்டில் இருந்து அடக்கம் செய்யும் தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்து வந்தபோது, வாகனத்தை பின்தொடர்ந்து வந்த மக்கள் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுததை காண முடிந்தது. இறுதி அஞ்சலியில் பங்கேற்ற முதியவர்கள், பெண்கள் திரண்டு வசந்தகுமார் செய்த உதவிகளை நினைவு கூர்ந்து ஆவேசமாக கோஷம் எழுப்பினர். அப்போது "வீரவணக்கம்... அப்பச்சி தம்பிக்கு வீரவணக்கம்" என்ற கோஷத்தைத் தொடர்ந்து ஒலித்தவாறு வந்தனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கல்லறை தோட்டம் வரும் வரை இந்த கோஷத்தை எழுப்பியவாறு வந்தனர். காமராஜரை 'அப்பச்சி' என்றே கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அழைப்பது வழக்கம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x