

ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், ரயில்வே சார்ந்த வரைபடங்களை இணையதளம் மூலம் தெளிவாக காணும் வகையிலும் ரயில்வே துறை இந்திய விண்வெளி ஆய்வு மையத்துடன் (இஸ்ரோ) விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.
ரயில் பயணிகளின் சேவையை மேம்படுத்தவும், பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்தவும் ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான தகவல்களை விரைவாக பெற ரயில்வே துறை இஸ்ரோவுடன் இணைந்து செயல்படவுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, ரயில் பாதைகளை இணையதளம் மூலம் துல்லியமாக பார்க்கவும், ஜிஐஎஸ் மேப் (புவியியல் தகவல் வரைபடம்) வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல், ரயில்களின் நகர்வுகளைக் கொண்டு ரயில் செல்லும் இடங்க ளின் தகவல்களை பெறவும் இஸ்ரோவுடன் இணைந்து செயல் படவுள்ளோம். இதற்காக விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்மூலம் ரயில் விபத்து, இயற்கை சீற்றம் ஏற்பட்ட பகுதிகளை உடனே கண்டுபிடிக்க முடியும். மேலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் முடியும். இதுதவிர, விரைவு ரயில்களில் வரும் காலங்களில் ‘வைபை’ வசதியையும் பெற முடியும்.
செல்போன் மூலம் டிக்கெட் பெறும் வசதி புதுடெல்லி, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்களையும் செல்போன் மூலம் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும்’’ என்றார்.
இது தொடர்பாக மற்றொரு அதிகாரி கூறும்போது, ‘‘பயணிகளின் சேவை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் ரயில்வே துறை இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பான அறிவிப்பு ஆரம்ப நிலையில் இருப்பதால், இது குறித்து எங்களுக்கு முழுமையாக தகவல்கள் தெரியாது’’ என்றார்.