

மதுரையில் போதை மாத்திரை களை விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
மதுரை கரிமேடு காவல் உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு மெஜூரா கோட்ஸ் பாலத்தின் கீழ் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வில்லாபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்த பிரதீப்குமார் (26), பொன்னகரம் 3-வது தெருவைச் சேர்ந்த பாலமுருகன் (18), பெத்தானி யாபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ராம்குமார் (23) எனத் தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்து விசாரித்ததில் பிரதீப்குமாரின் சகோதரர் பிரவீன்குமார் (30) நடத்தும் மருந்துக் கடையில் இருந்து மனநிலை பாதித்த, தூக்கம் வராதவர்களுக்கு அளிக்கும் மாத்திரைகளை வாங்கி, போதை மாத்திரைகள் எனக் கூறி அதிக விலைக்கு விற்பதும், இளைஞர்களை போதைக்கு அடிமையாக்குவதும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக பிரதீப்குமார், அவரது சகோதரர் பிரவீன்குமார், பாலமுருகன், ராம்குமார் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்து வேறு ஏதேனும் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா எனத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.