கோவையில் அதிகரிக்கும் கரோனா தொற்று: நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாற்றம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மற்றும் அதிகாரிகள்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மற்றும் அதிகாரிகள்.
Updated on
2 min read

கோவை மாநகரில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் புதிய ஏற்பாடுகளை செய்துள்ளது.

கோவையில் கடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை, ஒப்பிடும்போது, தற்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று (29-ம் தேதி) வரை தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 393. இதில் 10 ஆயிரத்து 582 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,522 பேர் சிகிச்சையில் உள்ளனர். 289 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் தினசரி பதிவாகும் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில், சராசரியாக 75 சதவீதம் பேர் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள்.

கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ப.ராஜ்குமார் கூறும்போது, ‘‘மாநகரில் கடந்த மார்ச் 2-வது வாரம் முதல்முறையாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் கண்டறியப்பட்டார். தொடர்ந்து எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தினசரி 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

நேற்று முன்தினம் பதிவான 496 என்பது இதுவரை இல்லாத உச்ச அளவாகும். கரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது: மாநகரில் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினமும் சராசரியாக 3,500 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஏறத்தாழ 300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.

மொத்தமுள்ள 6,200 வீதிகளில் கரோனா தொற்று அதிகரிக்கும் வீதிகள், தொற்று திரும்ப பதிவாகும் வீதிகள், தொற்று குறைந்த வீதிகள் என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வகை வீதிகளில் நோய் தடுப்பு முறைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

தொற்று பரவ மூல காரணமாக இருந்தவர் கண்டறியப்பட்டு, அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

டிரையாஜ் முறை

முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் நேரடியாக இஎஸ்ஐ அல்லது பிரத்யேக மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். தற்போது மண்டலம் வாரியாக மாநகராட்சியால் ‘டிரையாஜ்’ சோதனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் முதலில் அனுப்பப்பட்டு, அவர்களின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, மற்ற உடல் நலக்கோளாறுகள் குறித்து பரிசோதிக்கப்படுகிறது.

பின்னர், இஎஸ்ஐ அல்லது பிரத்யேக மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். மாநகர் முழுவதும் தினசரி சராசரியாக 120 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. சராசரியாக 12 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். 37 பிரத்யேக வாகனங்கள் மூலமும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்து வர்த்தக, தொழில் நிறுவனத்தினர், கடைகள் வைத்துள்ளோர் தங்களது ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனையை 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர, தொற்று உறுதி செய்யப்பட்டால், தனிமைப்படுத்துதல், கிருமிநாசினி தெளித்தல் போன்ற வழக்கமான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி மூலம் கை கழுவுதல், தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதோடு, காய்ச்சல் முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க பறக்கும் படையினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

மண்டல ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம்

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்காக, மண்டல அளவில் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறும்போது, "மாநகராட்சியின் தெற்கு மண்டலத்துக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பிரசன்னா ராமசாமி, வடக்கு மண்டலத்துக்கு மேனகா, கிழக்கு மண்டலத்துக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலங்கள்) விஷ்ணுவர்த்தினி, மேற்கு மண்டலத்துக்கு மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ், மத்திய மண்டலத்துக்கு தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்துதல் நிறுவன முதன்மை மண்டல மேலாளர் சாதனைக்குரல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், பரிசோதனைகளை அதிகரித்தல், முடிவுகளை உடனடியாக தெரிவித்தல், மருத்துவ முகாம்களை அதிக அளவில் நடத்துதல், வீடு வீடாகச் சென்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நோய்த் தடுப்பு நடவடிக்கை சரியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதைக் கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். ஒவ்வொரு மண்டலத்திலும் கண்காணிப்பு மையம் அமைத்து, ஒருங்கிணைப்பு குழு அலுவலர்கள் தினமும் தங்களது அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in