

பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடர்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விசாரணை நடந்து வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 75 ஆயிரம் வங்கிக் கணக்குகளை முடக்க வேளாண் துறையினர் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டத்தில் வறுமையில் வாடும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒரு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில், ஆன்லைன் மூலம் விவசாயிகள் அல்லாதோரும் சேர்ந்து இந்த நிதியை பெறுவதாக புகார் எழுந்தது.
குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இந்த முறைகேடு அதிகளவில் நடந்திருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து வேளாண் துறை அதிகாரிகள் வருவாய் துறையினருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் கணினி மையம் ஒன்றுக்கு சீல்வைக்கப்பட்டது. ரிஷிவந்தியம் வேளாண் உதவி இயக்குநர் ராஜசேகர், தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குநர் அமுதா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இப்பகுதியில் வேளாண் துறையில் பணியாற்றிய 18 ஒப்பந்த ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யபபட்டனர். கடலூர் மாவட்டத்தில் 3 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
2 மையங்களுக்கு சீல்
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டையில் உள்ள 2 பொதுச்சேவை மையங்கள் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. திருக்கோவிலூர் வட்டாட்சியர் சிவச்சந்திரன் தலைமையில் வேளாண் அலுவலர் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் சென்று அங்கு சோதனை நடத்தினர். தொடர்ந்து அங்கிருந்த கணினிகளை பறிமுதல் செய்து, சீல் வைத்தனர்.
“கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் பேர் இந்த உதவித்தொகையை முறைகேடாக பெற்றது தெரியவந்துள்ளது. அவர்களின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும்; பெற்ற பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த வங்கிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரை செய்துள்ளோம்” என்று மாவட்ட வேளாண் இயக்குநர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் இதுதொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.