

செங்குன்றம் அருகே ஏரியில் மீன்பிடித்தபோது 6 கிலோ எடையுள்ளநடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த விலாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறுங்காவூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வலையில் ஒரு தோல் பை சிக்கியுள்ளது.
அந்த தோல் பையை வெளியே எடுத்துப் பார்த்தபோது, ஒன்றரை அடி உயரமும் 6 கிலோ எடையும் கொண்ட உலோகத்தாலான நடராஜர் சிலை இருந்துள்ளது.
இதுகுறித்து, செங்குன்றம் போலீஸாருக்கு முரளி தகவல் அளித்தார். தகவலறிந்த போலீஸார் சிலையை மீட்டு, வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிலையை தொல்லியல் துறைஆய்வுக்கு உட்படுத்திய பிறகே,அந்த நடராஜர் சிலை ஐம்பொன்னால் ஆனதா அல்லது வேறு உலோகத்தால் ஆனதா என்பது தெரியவரும் என்றனர்.