

தமிழகம் முழுவதும் 270 மீனவர்களுக்கு மானிய விலையில் சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பல நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்கும் தொழில்களில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு, வானிலையில் மாற்றம் நிகழ்ந்து பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க எந்த தொலைதொடர்பு சாதனங்களும் இல்லாமல் இருந்தது. இதற்கு தீர்வுகாணும் வகையில் மீனவர்களுக்கு சாட்டிலைட் போன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு சாட்டிலைட் போன்கள் வழங்கும் பணிகடந்த ஆண்டு தொடங்கியது.இதுவரை 270 சாட்டிலைட் போன்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாட்டிலைட் போன்கள் மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கடலில் சாதாரண போன்களில் சிக்னல் கிடைக்காது என்பதால் இப்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 270 சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த போனின் விலை ரூ.1 லட்சமாகும். இவற்றில், 75 சதவீதம் மத்திய, மாநிலஅரசுகள் மானியமாக வழங்குகிறது. மீனவர்கள் தரப்பில் 25 சதவீதம் வழங்க வேண்டும்.
ஆபத்து காலத்தில் கரையில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள பயன்படும் என்பதால் ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்கள் சாட்டிலைட் போன்களை வாங்கும்படி அறிவுறுத்தி வரு கிறோம்.