

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் அவதூறு பிரச்சாரம் செய்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இதுவரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர்கள் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றினார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது காங்கிரஸ் கட்சியைப் பற்றி அவதூறாகப் பேசியிருக்கிறார். இது கடும் கண்டனத்துக்குரியது.
மோடி ஊழலுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. பாஜக அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது பற்றி மோடி பேசுவதே இல்லை. அக்டோபர் 1-ம் தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா நடைபெறும். குமரிஅனந்தன், சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். காங்கிரஸையும், சிவாஜியையும் பிரித்து பார்க்க முடியாது. காங்கிரஸ் வளர்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. எனவே, காங்கிரஸ் சார்பில் அவருக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம்.
அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் சார்பில் மதுவிலக்கை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும். வாகன பிரச்சாரமும் நடைபெறும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.