

கோவையில் கரோனா மருத்துவப் பரிசோதனைகளுக்கு மட்டுமல்ல மருத்துவ மையங்களில் படுக்கைகளுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகச் சிங்காநல்லூர் எம்எல்ஏ கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இன்று வடகோவை, கிராஸ்கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், கரோனா நோய்த்தொற்றுப் பரவல் மற்றும் உயிரிழப்புகள் கோவையில் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
''கடந்த 27.08.2020 அன்று, கோவையில், ஒரே நாளில் 439 பாதிப்புகள் மற்றும் 11 இறப்பு எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன. கோவையில் மொத்த பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 13,398 ஆக உள்ளது. 3,325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274. கடந்த சில நாள்களாக நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் என்று 400 பேர் முதல் 500 பேர் வரை பதிவாகி வருகிறது. கோவையில் கரோனா பாதிப்பு விகிதம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதையே இந்தத் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
26.08.2020 அன்று, அடுத்த 15 நாட்களில் தினசரி எண்ணிக்கை ஆபத்தான முறையில் 500 என்ற தடையைத் தாண்டி விடும் என்று சுகாதார சேவைகளின் துணை இயக்குனர் ஜி.ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் கோவை மாவட்டத் திமுக சார்பில் ஏற்கெனவே கடந்த 29.05.2020 மற்றும் 06.07.2020 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு குறித்துப் பல ஆலோசனைகளைத் தெரிவித்ததோடு, கோவை மாவட்ட நிர்வாகம் வெளிப்படைத் தன்மை கொண்ட கரோனா ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியும் வந்தோம். அதற்கு இதுவரை எந்தப் பதிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்படவில்லை.
கோவையில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவையைப் பொறுத்தவரை கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனை, ESI மருத்துவமனை மற்றும் கொடீசியா ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராமல் தீவிரமாக வைரஸ் பரவினால், இப்போதுள்ள மருத்துவமனைகளில், திடீரென நோயாளிகள் வருகை அதிகரிப்பு காரணமாக, கூட்டம் அதிகரிக்கலாம்.
சிகிச்சைக்குப் படுக்கை வசதிகள் போதாது என்ற நிலை ஏற்பட்டால், முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். போதிய அளவுக்கு மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளதா? என்ற எந்த ஒரு முன்யோசனையும் இன்றி ‘கரோனாவை ஒழித்த உத்தமரே’ என்ற போஸ்டர்கள் உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயர், புகைப்படம் தாங்கி ஒட்டப்பட்டுள்ளன.
கரோனா பரிசோதனைகள் போதுமான அளவில் இல்லை!
கோவையில் கரோனா வைரஸ் பரிசோதனைகளைப் பரவலாக்கவும் அதிகமாக்கவும் வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து இலவசமாகச் சிறப்புப் பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும். கரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு முடிவுகள் தெரிய காலதாமதமாவதைத் தவிர்க்க கரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக வேண்டும். ஆன்லைன் மூலம் பரிசோதனை முடிவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரிசோதனை மட்டுமல்ல, மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும் பஞ்சம் என்ற நிலைதான் இன்றைக்கு உள்ளது. அரசு வெளிப்படையாகத் தகவல்களைப் பகிர்ந்து, மக்களை எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். வெளிப்படைத் தகவல்களால் மக்கள் எச்சரிக்கை அடைந்திருப்பார்கள்.
இதற்கிடையே கொடிய கொள்ளை நோய் நேரத்தைப் பயன்படுத்தி, உள்ளாட்சித் துறையில் பல விதமான வழிகளில் முறைகேடுகள் வரைமுறையற்று நடைபெற்று வருகின்றன. கரோனா சூழலைப் பயன்படுத்தி டெண்டர் இல்லாமலேயே, தமிழக அரசின் அனைத்துக் கொள்முதல்களும் செய்யப்படுவதால், உள்ளாட்சித் துறையில் ப்ளீச்சிங் பவுடர் முதல் மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள் வரை, கரோனா தொற்று உள்ள இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் என அனைத்திலும் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்குக் காலம் ஆகஸ்ட் மாதம் முடியும் நிலையிலும் கரோனா பாதிப்பு குறையவில்லை''.
இவ்வாறு எம்எல்ஏ கார்த்திக் தெரிவித்தார்.