Last Updated : 29 Aug, 2020 07:06 PM

 

Published : 29 Aug 2020 07:06 PM
Last Updated : 29 Aug 2020 07:06 PM

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து கடந்த மாதமே குமரி மக்களிடம் இருந்து விடைபெற்ற வசந்தகுமார் எம்.பி: கடைசி நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து காங்கிரஸார் கண்ணீர்

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வசந்தகுமார் எம்.பி. கடந்த மாதமே குமரி மக்ககளிடம் இருந்து விடைபெற்று சென்றார். இதை அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் பிரமுகர்கள் கண்ணீருடன் நினைவு கூர்ந்தனர்.

கரோனா தொற்று தீவிரமடைந்த கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே அதைப்பற்றி பொருட்படுத்தாமல் கன்னியாகுமரி தொகுதியில் கிராம, நகரப் பகுதி மக்களிடம் சென்று வசந்தகுமார் எம்.பி. குறைகளைக் கேட்டறிந்தார்.

கிராமப்பகுதிகளில் கரோனாவினால் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் தவித்தவர்களுக்கு உணவுப் பொருட்கள், காய்கறி, மற்றும் செலவிற்கு பணம் போன்றவற்றை கட்சி தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வந்தார். இதனால் வசந்தகுமாரின் மரணத்தை இன்னும் நம்ப முடியாமல் மக்கள் சோகத்தில் கண்ணீர் விடுவதை காணமுடிந்தது.

கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் எப்போதும் முககவசமும், கையுறைகளுடன் வந்த வசந்தகுமார், மக்களிடம் குறை கேட்பது மற்றும் நல உதவிகள் வழங்குவதில் பரபரப்பாக செயல்பட்டு வந்தார்.

கரோனா நேரத்தில் தற்காப்புகளைக் கடைபிடிக்கவும் அறிவுறுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த ஜீலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் தொண்டர்களுடன் மாலை அணிவித்து வணங்கிய பின்பு அங்கு கூடிநின்ற மக்களைப் பார்த்து சிரித்தபடி கையசைத்துச் சென்றார். இது தான் அவர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியாக இருந்தது.

அதன் பின்பு மறுநாள், அதாவது ஜீலை 16-ம் தேதி சென்னை புறப்பட்டுச் சென்றார். அங்கு கட்சிப் பணிகளையும், வர்த்தகத்தையும் கவனித்து வந்த அவர் கரோனாவினால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவியதை குமரி காங்கிரஸாரால் இன்னும் ஜீரணிக்கவே முடியவில்லை. இதுகுறித்து குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மற்றும் கட்சியினர் கூறுகையில்;

காமராஜர் மீது மிகுந்த பற்றும், மரியாதையும் வைத்திருந்தவர் வசந்தகுமார் எம்.பி., அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்திய நிகழ்வில் காங்கிரஸார் உற்சாகத்துடன் பங்கேற்றோம். குமரி மண்ணில் இது தான் அவரது கடைசி நிகழ்ச்சி என யாரும் எண்ணி பார்க்க முடியாவில்லை.

கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவார் என நினைத்தோம். ஆனால் அவருக்கு அஞ்சலி செலுத்த அவரது உடல் மட்டுமே வந்துள்ளது. இதனால் குமரி காங்கிரஸார் மட்டுமின்றி மாவட்ட மக்கள் அனைவருமே சோகத்தில் ஆழ்ந்துள்ளோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x