

நாகை மாவட்டம் சீர்காழியில் இன்று எளிமையான முறையில் நெல் திருவிழா நடைபெற்றது. இந்த நெல் திருவிழாவில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கினார்.
சீர்காழியில் இயங்கிவரும் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நெல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பாரம்பரிய விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள். மறைந்த நெல் ஜெயராமனால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நெல் திருவிழா கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
அதன்படி ஆறாவது ஆண்டாகச் சீர்காழி மேலவீதி மணிக்கூண்டு அருகில் உள்ள மேலவீதி ச.மு.இ.தொடக்கப் பள்ளியில் நலம் அறக்கட்டளையின் சட்ட ஆலோசகர் சுந்தரய்யா தலைமையில் நடைபெற்ற விழாவில் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு விதை நெல்களை வழங்கினார். பாரம்பரிய வகைகளான கருப்புக் கவுனி , சீரகச் சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, கிச்சிலி சம்பா ஆகிய விதைகள் தலா இரண்டு கிலோ வழங்கப்பட்டன.
இந்த விழாவில் பேசிய தருமபுரம் ஆதீனம், "நமது பாரம்பரிய அரிசியில் சமைத்த உணவு வகைகளைச் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற முடியும். இதனால் கரோனா போன்ற எந்த நோய்த் தொற்றும் எளிதில் வராது. ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு மட்டுமல்ல ஆடு, மாடுகளுக்கும் கூட நோய் ஏற்படுகிறது. அதனால் இயற்கையான, நமது பாரம்பரிய முறையில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
இவ்விழாவில் இயற்கை வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் முறைகள் குறித்து சுந்தரபாண்டியன், நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள உணவுப்பொருட்கள், இயற்கை விவசாய முறை பற்றி கிள்ளை சகாப்பு, ஒற்றை நெல் சாகுபடியில் லாபம் குறித்து நெப்பத்தூர் கோவிந்தராஜன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
விழாவில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் கணிவண்ணன், ரோட்டரி சங்கத் தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் சண்முகம், லயன்ஸ் சங்கத் தலைவர் சோமு, திருக்குறள் பண்பாட்டுப் பேரவை முன்னாள் பொருளாளர் முத்து கருப்பன், முத்து உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். நிறைவில் அறக்கட்டளைச் செயலளார் சுதாகர் நன்றி கூறினார்.