Last Updated : 29 Aug, 2020 06:28 PM

 

Published : 29 Aug 2020 06:28 PM
Last Updated : 29 Aug 2020 06:28 PM

கரோனா பணியை சுட்டிக்காட்டி அரசு மருத்துவரின் ராஜினாமாவை மறுக்க அரசுக்கு உரிமையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனா பணியை சுட்டிக்காட்டி அரசு மருத்துவரின் ராஜினாமாவை மறுக்க அரசுக்க உரிமையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சாம்ஜாய்சன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
ஏர்வாடியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு உதவி அரசு மருத்துவராக 2019-ல் நியமிக்கப்பட்டேன்.

இந்நிலையில் சென்னை டாக்டர் ரங்கராஜன் நினைவு மருத்துவமனையில் டிஎன்பி பொது அறுவை சிகிச்சை மருத்துவ மேற்படிப்பு படிக்க சீட் கிடைத்தது. இதனால் அரசு மருத்துவர் பதவியை ராஜினமா செய்தேன்.

மருத்துவ மேல்படிப்பில் சேர்வதற்காக அரசு மருத்துவர் பணியில் சேரும் போது வழங்கிய எனது எஸ்எஸ்எல்சி, மேல் நிலைக்கல்வி மற்றும் சிஆர்ஆர் ஐ, பட்டப்படிப்பு, எம்சிஆர் பதிவு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் ஆகிவற்றை கேட்டு 18.8.2020-ல் கடிதம் கொடுத்தேன்.

ஆனால் எனது ராஜினாமாவை ஏற்கவில்லை. எனக்கு சான்றிதழ் கிடைக்காததால் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எனது ராஜினாமாவை ஏற்று, மருத்துவ மேற்படிப்பில் சேர எனக்குரிய அனைத்து சான்றிதழ்களையும் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், அரசு மருத்துவர் பணியில் சேர்பவர்கள் அந்தப்பணியில் 3 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். இந்த நிபந்தனை ஏற்று அரசு மருத்துவர் பணியில் சேர்பவர்கள் 2 ஆண்டுகளுக்கு மருத்துவ மேல்படிப்பில் சேர அனுமதிக்கப்படமாட்டார்கள். இதனால் மனுதாரருக்கு சான்றிதழ்கள் வழங்க முடியாது.

மேலும் தற்போது கரோனா காலம். மனுதாரர் கிராமப்பகுதியில் பணிபுரிகிறார். கரோனா ஒழிப்புக்காக மருத்துவர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் ஒரு மருத்துவரை கூட வெளியே செல்லவிடாமல், மருத்துவர்களின் எண்ணிக்கையை அரசு அதிகரித்து வருகிறது. இதனால் மனுதாரரின் பணி தேவைப்படுகிறது என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்தியா மட்டும் அல்ல கரோனாவால் உலகம் முழுவதும் கஷ்டமான காலத்தில் உள்ளது. ஒட்டு மொத்த உலகமும் கரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. இப்போராட்டத்தில் மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள் முன்களப்பணியாளர்களாக உள்ளனர். மனுதாரர் கிராமப்புற மருத்துவமனையில் அரசு மருத்துவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது சேவை கிராமப்பகுதி மக்களுக்கு தேவை என்பதை மறுப்பதற்கில்லை.

அதே நேரத்தில் மருத்துவத்துறையை பொருத்தவரை மருத்துவர்கள் தங்களின் தகுதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இது மட்டுமே சமூகத்திற்கு பெரியளவில் நண்மையை தரும். இதனால் இளநிலை மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கும் போது அதை தடுக்கக்கூடாது.

அரசுக்கு சமூகத்துக்கு சேவையாற்ற கூடுதல் மருத்துவர்கள் தேவை என்பது ஒருபுறம் இருந்தாலும், மருத்துவர்கள் தங்களின் தகுதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் பார்க்க வேண்டும். இதனால் மனுதாரர் பணியை ராஜினாமா செய்துள்ள நிலையில் கரோனா பணியை காரணம் காட்டி அவரது ராஜினாமாவை ஏற்ற அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. இதனால் மனுதாரரின் ராஜினாமாவை ஏற்று அவருக்குரிய அனைத்து சான்றிதழ்களையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x