

திருநெல்வேலியில் நுண் உரமாக்கும் மையத்தில் பணியின்போது எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கி கை துண்டிக்கப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர் பாக்கியலெட்சுமியின் மகள் கிருத்திகா பெயரில் ரூ.1 லட்சத்துக்கான நிலையான வைப்பு தொகை பத்திரத்தை மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் வழங்கினார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட என்.ஜி.ஓ.பி.காலனி பகுதியில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் மட்க்கும் கழிவுகளை கொண்டு நுண் உரமாக்கும் மையத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நுண் உரமாக்கல் மையத்தில் பணியிலிருந்த சுயஉதவிக்குழுவை சார்ந்த தூய்மைப் பணியாளர் பாக்கியலெட்சுமி என்பவரின் வலது கை எதிர்பாரா விதமாக இயந்திரத்தில் சிக்கி துண்டானது.
தற்போது திருநெல்வேலி அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவ மனையில் அவர் சிகிக்கை பெற்று வருகிறார். இந்த விபத்து ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது மருத்துவம் மற்றும் இதர செலவிற்க்காக ரூ50ஆயிரம் ஏற்கனவே மாநகராட்சியில் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாக்கியலெட்சுமியை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார். பாக்கியலெட்சுமியின் மகள் கிருத்திகா பெயரில் மாநகராட்சி அலுவலர்களால் வங்கியில் செலுத்தப்பட்ட
ரூ.1 லட்சத்துக்கான நிலையான வைப்புத் தொகைக்கான பத்திரத்தினையும் வழங்கினார். மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகிபிரேமலா, சுகாதார ஆய்வாளர் சாகுல் ஆகியோர் உடனிருந்தனர்.