ஏ.வி.சுப்பிரமணியன்
ஏ.வி.சுப்பிரமணியன்

புதுச்சேரி காங்கிரஸ் தலைவருக்கு கரோனா தொற்று உறுதி; நிகழ்வுகளில் பங்கேற்ற நிர்வாகிகள் அச்சம்

Published on

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். போராட்டம், விழாக்கள் எனப் பல நிகழ்வுகளில் அவர் தொடர்ந்து பங்கேற்றிருந்ததால் காங்கிரஸ் நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளனர்.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், எம்எல்ஏக்கள் ஜெயபால், சிவா ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் சிவா எம்எல்ஏ சென்னையில் பிரபல மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதர மூவரும் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த 2 நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சந்தேகத்தின்பேரில் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்தப் பரிசோதனையில் சுப்பிரமணியனுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனுக்குக் கரோனா தொற்று உறுதியானதாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து அவர் தனது வீட்டில் தனிமையில் உள்ளார். அவரின் குடும்பத்தினர் 4 பேருக்கு இன்று (ஆக.29) கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வட்டாரங்களில் கூறுகையில், "கடந்த 20-ம் தேதி ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மாலை அணிவித்துவிட்டு கட்சி அலுவலகத்தில் விழா ஆகியவற்றில் பங்கேற்றார்.

ஏராளமானோர் பங்கேற்ற நிகழ்ச்சியின் மூலம் அவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமையன்று காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அதோடு, அண்ணாசிலை அருகே மாணவர் காங்கிரஸ் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கி வைத்தார். இதனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in