

ஓட்டேரியில் சிமென்ட் கல்லை தலையில் போட்டு பெயின்டிங் ஒப்பந்ததாரர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவியும் நண்பரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவை சேர்ந்தவர் ஜவஹர்லால் (45). ஒப்பந்த அடிப்படையில் பெயின்டிங் வேலைகளை செய்துவந்தார். இவரது மனைவி பீம்லா தேவி (42). இவர் களுக்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் உத்தரப் பிரதேச மாநிலம் போராப்பூர். 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து குடியேறினர்.
அதே ஊரை சேர்ந்தவர் ராம்பிரசாத். ஜவஹரின் நண்பரான இவர், அவரிடம் பெயின்டராக வேலை செய்து வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று தனியாக பெயின்டிங் தொழில் செய்து வருகிறார். இவரும் ஓட்டேரியில்தான் வசிக்கிறார். ஜவஹர் மனைவி தேவிக்கும், ராம்பிரசாத்துக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ஜவஹர் அவர்களை பலமுறை கண்டித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு ஜவஹர் போதையில் வீடு திரும்பினார். அப்போது, அவருக்கும் தேவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிள்ளைகள் சாப்பிட்டு தூங்கச் சென்றுவிட்டனர். ஜவஹர் தனது அறைக்கு சென்று தூங்கினார்.
இந்நிலையில், படுக்கையில் தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் ஜவஹர் நேற்று காலை இறந்து கிடந்தார். கணவரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பியதாக தேவி கூச்சல் போட்டு கதறி அழுதார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புளியந்தோப்பு காவல் உதவி ஆணையர் ஜெயசுப்பிரமணியன், ஓட்டேரி ஆய்வாளர் சுந்தர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ஜவஹரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கொலை தொடர்பாக தேவியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். வெளியில் இருந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தனது கணவரை கொன்றுவிட்டதாக அவர் திரும்பத் திரும்ப கூறினார். வீட்டின் கதவு காலை வரை பூட்டப்பட்டிருந்த நிலையில், வெளி யாட்கள் எப்படி உள்ளே நுழைந்தனர் என அவரிடம் போலீஸார் விசாரித்தனர்.
இதற்கிடையில், கொலை நடந்த அறையில் சிமென்ட் கல்லின் உடைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தேவியை தீவிரமாக விசாரித்ததில், ராம்பிரசாத்துடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
கணவர் போதையில் தூங்கிய பிறகு, தேவி செல்போனில் தொடர்புகொண்டு ராம்பிரசாத்தை வரவழைத்துள்ளார். அவர்கள் இருவரும் சேர்ந்து சிமென்ட் கல்லை எடுத்து ஜவஹரின் தலையில் போட்டுள்ளனர். தலை உடைந்து அவர் இறந்தார். பிறகு ராம்பிரசாத் அங்கிருந்து சென்றுவிட்டார். தேவியும் எதுவும் தெரியாததுபோல வீட்டிலேயே இருந்துவிட்டார். மர்ம நபர்கள் கொன்றதாக கூறி நாடகமாடியவர் சிக்கிக்கொண்டார் என்று போலீஸார் கூறினர். ரத்தக்கறை படிந்த சிமென்ட் கல்லை தண்ணீரில் கழுவி அதை தேவி மறைத்து வைத்திருந்தார். அதுவும் கைப்பற்றப்பட்டது. கொலை தொடர்பாக பீம்லா தேவியும், ராம்பிரசாத்தும் கைது செய்யப்பட்டனர்.