Last Updated : 29 Aug, 2020 04:08 PM

 

Published : 29 Aug 2020 04:08 PM
Last Updated : 29 Aug 2020 04:08 PM

சொந்த ஊரில் பெற்றோர் கல்லறைக்கு அருகில் நாளை அடக்கம்: வசந்தகுமார்.எம்.பி. மறைவால் சோகத்தில் மூழ்கிய கன்னியாகுமரி மக்கள்; கடைகள் அடைப்பு

கரோனா தொற்றால் உயிரிழந்த வசந்தகுமார் எம்.பி.யின் உடல் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நாளை காலை அடக்கம் செய்யப்படுகிறது.

ஆகையால், அகஸ்தீஸ்வரத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 10-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நுரையீரல் பாதிப்பு அதிகரித்த நிலையில் நேற்று மாலையில் அவர் மரணமடைந்தார்.

வசந்தகுமாரின் உடல் சென்னை தி நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. பிரமுகர்கள், மற்றும் நிறுவன ஊழியர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சென்னையில் இருந்து வசந்தகுமாரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அகஸ்தீஸ்வரத்திற்கு அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. வீட்டு அருகே உள்ள குடும்ப தோட்டத்தில் வசந்தகுமாரின் உடல் நாளை காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரத்தில் இன்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. டி.எஸ்.பி. கணேசன் தலைமையில் போலீஸார் வசந்தகுமாரை அடக்க செய்யவுள்ள அவரது பெற்றோர்களின் கல்லறைத் தோட்ட பகுதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வசந்தகுமார் மறைவை முன்னிட்டு அவரது சொந்த கிராமமான அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதைப்போலவே கன்னியாகுமரி தொகுதியைச் சேர்ந்த பெரும்பாலான கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கண்ணீர் அஞ்சலி பேனர்கள வைக்கப்பட்டிருந்தன. கடைகளை அடைத்து கறுப்பு கொடியேற்றி மக்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.

வசந்தகுமார் வீட்டு முன்பு நேற்று முதல் உறவினர்கள் குவியத் தொடங்கினர். நாகர்கோவில் உட்பட மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் மதியம் ஒரு மணி நேரம் அடைத்து வியாபாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

வசந்தகுமாரின் பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை அருகிலேயே அவரது உடலும் அடக்கம் செய்யப்படுகிறது. வசந்தகுமார் மறைவை முன்னிட்டு நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன்
மற்றும் காங்கிரஸார் வசந்தகுமார் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் மார்த்தாண்டம் சாங்கையில் உள்ள காங்கிரஸ் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் வசந்தகுமார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. குளச்சல் காமராஜர் சிலை அருகே வசந்தகுமார் படத்திற்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று மாலையில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து அனைத்து கட்சியினர் பங்கு பெற்ற மவுன ஊர்வலம் நடைபெறுகிறது. நாளை மாலை குழித்துறையில் இருந்து மார்த்தாண்டத்திற்கு வசந்தகுமார் மறைவை முன்னிட்டு மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெறுகிறது.

அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமாரின் உடல் அடக்கம் நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால், தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x