கேரளாவில் ஓணம் கொண்டாட்டம்: ஒட்டன்சத்திரம் சந்தையில் ரூ.3 கோடி காய்கறிகள் விற்பனை

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்
Updated on
1 min read

கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் சந்தையில் இருந்து சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான காய்கறிகளை வியாபாரிகள் கேரளாவுக்கு வாங்கிச் சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில் காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளில் 60 சதவீதம் கேரளாவுக்கும், மீதம் உள்ளவை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாப்படுகிறது. இதற்காக கேரள வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து ஏராளமான லாரிகளில் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் இரு தினங்களாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் களைகட்டியுள்ளது.

மேலும் கேரள மக்கள் அதிகம் பயன்படுத்தும் வெண் டைக்காய், சுனாமிகாய், தட்டப் பயறு, வெள்ளைப்பயறு, சேனைக்கிழங்கு, வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவை விலை உயர்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.27-க்கு விற்றது. நேற்று ரூ.55-க்கு விற்பனையானது. கிலோ ரூ.25-க்கு விற்ற பச்சைப்பயறு ரூ.60-க்கு விற்பனையானது. கிலோ ரூ.30-க்கு விற்ற தட்டைப்பயறு ரூ.60-க்கு விற்பனையானது.

வியாபாரிகள் கூறியதாவது:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இரு தினங்களில் நூறு டன்னுக்கு மேல் காய்கறிகள் விற்பனையாகும். இந்த ஆண்டு குறைந்த அளவிலான விற்பனையே நடந்துள்ளது.

முதல் நாள் ஒன்றரை கோடி ரூபாய்க்கும், நேற்று ஒரு கோடி ரூபாய்க்கும் என சுமார் ரூ.2.5 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. இன்று கடைசி நாள் வியாபாரம். இந்த ஆண்டு ஓணத்துக்கு மொத்தம் ரூ.3 கோடி வரை காய்கறிகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட குறைவான விற்பனையே என்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in