14 மாவட்ட வழக்கறிஞர்களுக்கு வசதியாக மதுரையில் தமிழ்நாடு பார் கவுன்சில் கிளை

14 மாவட்ட வழக்கறிஞர்களுக்கு வசதியாக மதுரையில் தமிழ்நாடு பார் கவுன்சில் கிளை
Updated on
1 min read

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சென்னையில் செயல்படுகிறது. பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களில் மூன்றில் ஒரு பங்கு வழக்கறிஞர்கள், தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

இதனால் பார் கவுன்சில் கிளையை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அமைக்க வேண்டும் என பார் கவுன்சில் இணைத் தலைவர் பி.அசோக், ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் ஜி.தாளை முத்தரசு ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அண்மையில் நடைபெற்ற பார் கவுன்சில் கூட்டத்தில், மதுரையில் பார் கவுன்சில் கிளையை அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உயர் நீதிமன்றக் கிளையில் பார் கவுன்சில் கிளை அமைக்க இடம் ஒதுக்க, சென்னை உயர் நீதிமன்றக் கட்டுமானக் குழுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜி.தாளை முத்தரசு கூறியதாவது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களின் வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் அடையாள முத்திரை, அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் பெற சென்னைக்கு சென்று வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதனால் தென் மாவட்ட வழக்கறிஞர்களுக்கு வசதியாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் கிளையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் நிறுவ வேண்டும் என 2012-ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கோரிக்கை ஏற்கப் பட்டு, மதுரையில் பார் கவுன்சில் கிளையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றக் கிளை வளாகத்தில் இடம் வழங்கியதும், அதில் ஒரே நேரத்தில் 200 வழக்கறிஞர்கள் பதிவு செய்யும் வகையில் அரங்கு, கூட்ட அரங்கு, விசாரணை அறை, அலுவலக அறை என அனைத்து வசதிகளுடன் பார் கவுன்சில் கிளை கட்டப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in